சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்திக்கு 4 நாள் இடைவெளி தமிழுக்கு ஒரே ஒரு நாளா? தேர்வு அட்டவணையை திருத்த அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம்தேதி தொடங்கும் சி.பி.எஸ்.இ 10ம்வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் தேர்வாக பிப்ரவரி 17ம்தேதி கணித பாடத் தேர்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி 21ம்தேதி ஆங்கிலம், 23ம்தேதி தமிழ் மற்றும் மாநில மொழிகள், 25ம்தேதி அறிவியல், 27ம்தேதி கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள், மார்ச் 2ம்தேதி இந்தி, மார்ச் 7ம்தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது.
பிப்ரவரி 21ம்தேதி ஆங்கில பாடத் தேர்வை எழுதும் மாணவர்கள், அடுத்த ஒரு நாள் இடைவெளியில் 23ம்தேதி தமிழ் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, அடுத்த ஒரு நாள் இடைவெளியில் அறிவியல் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். இதனால் தமிழ்ப் பாடத்தை படிப்பதற்கும், அறிவியல் பாடத்தை படிப்பதற்கும் போதிய கால இடைவெளி கிடைக்காது. இதனால் அந்த இரு பாடங்களிலும் அவர்களின் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது.
எனவே, தமிழ் பாடத் தேர்வுக்கு முன்னும், பின்னும் குறைந்தது 3 நாட்கள் இடைவெளி இருப்பதைப் போல தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். பாதிக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள அநீதியை போக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
