புதுடெல்லி: நாடு முழுவதும் 20சதவீதம் எத்தனால் கலந்த “இ20” பெட்ரோலை மட்டும் ஒன்றிய அரசு விற்று வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கை வாகன உரிமையாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது எனக் கூறி ஒன்றிய அரசின் முடிவுக்கு தடைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில், குறிப்பாக 2023ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்க கூடிய வகையில் வடிவமைக்கவில்லை என்றும், எனவே எத்தனால் கலக்காத பெட்ரோலையும் விற்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி, இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக பெரிய லாபி உள்ளது.ஒன்றிய அரசின் ஈ-20 கொள்கை கரும்பு விவசாயிகளுக்கு பயனளிப்பதோடு, இந்தியாவின் அந்நிய செலாவணியை சேமிக்கும். மேலும் நாட்டிற்கு வெளியே உள்ளவர்கள் இந்தியா என்ன வகையான எரிபொருளை பயன்படுத்த வேண்டும் என்று எப்படி ஆணையிட முடியும் என்று தெரிவித்தார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்துதலைமை நீதிபதி உத்தரவிட்டார்.