அஜித்குமார் மரண வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய 6 வார கெடு: சிபிஐக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மற்றும் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாரீஸ்குமார், தீரன்திருமுருகன், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்ளிட்ட பலர் மனு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில், எப்ஐஆர், முதல் கட்ட இறுதி அறிக்கை ஆகியவற்றின் நகல்களை கேட்டு செப்.8ல் விசாரணை நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. எனவே, இவற்றை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில், இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 6 வாரத்திற்குள் இறுதி குற்ற பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அஜித் குமார் மரண வழக்கோடு, நிகிதாவின் நகை திருட்டு புகார் வழக்கையும் சேர்த்து விசாரித்து 6 வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.