Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு: பவானியில் 25 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

பவானி: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானியில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி எட்டியதை தொடர்ந்து, அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் நீர் வெளியேற்றம் நேற்று இரவு 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.இதனால், காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்றங்கரையோர பகுதிகளான கந்தன் நகர், பசுவேஸ்வரர் வீதி, மீனவர் தெரு, பழைய பாலம், பாலக்கரை ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் இருந்து பொதுமக்கள் உடைமைகளுடன் நேற்று இரவு வெளியேறினர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பவானி கந்தன் நகர் பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. பவானி பழைய பாலம் பகுதியில் வீடுகளின் படிகளைத் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் கரையோர பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. போலீசார் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டதுடன், ஆற்றில் குளிப்பவர்கள், துணி துவைப்பவர்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தனர். காவிரி-பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடும் பகுதியை தண்ணீர் சூழ்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால், படித்துறைக்கு செல்லும் வழித்தடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. படித்துறையில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி-நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை இணைக்கும் பழைய பாலம் மூடப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இப்பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி வெள்ளம் கூடுதுறை வழியாக பவானி ஆற்றில் உட்புகுந்ததால் சுமார் 15 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்ட தலைமை நீரேற்று நிலையத்தைத் தாண்டி, காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்பகுதி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.