Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10 நாட்களில் காவிரி நீர் நாகை வந்து சேரும் டெல்டா பகுதியில் நடப்பாண்டு குறுவை சாகுபடியில் இலக்கை எட்டுவோம்

* மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி

* பட்டாசு வெடித்து கொண்டாடிய நாகை விவசாயிகள்

நாகப்பட்டினம் : குறிப்பிட்ட காலத்தில் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் காவிரி டெல்டா மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 8 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து சாதனை படைக்க முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கர்நாடக அரசின் சதியால் கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் முப்போக சாகுபடி ஒருபோக சாகுபடியாக மாறியது.

இதற்கு இடையில் இயற்கை இடர்பாடு மற்றும் பருவம் தவறிய மழை ஆகிய காரணங்களால் ஒரு போக சாகுபடியில் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடிக்கும் மேல் இருப்பதால் காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நேற்று முதல்வர் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்டில் பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து விவசாயிகள் கொண்டாடினர். அப்போது காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் நிருபர்களிடம் கூநியதாவது:

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் அதாவது ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் நடப்பு ஆண்டில் 50ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் செய்ய வாய்ப்பு உள்ளது. வேளாண் பணிகளை மேற்கொண்டுள்ள டெல்டா விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்குவதுடன், விதை, நெல் இருப்பு வைத்து, குறுவை தொகுப்பை வழங்க வேண்டும்.

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் 10 நாட்களுக்குள் நாகப்பட்டினம் மாவட்டத்தை வந்து சேரும். காவிரி டெல்டா மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

நடப்பாண்டு 7 முதல் 8 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து சாதனை படைக்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.