கால்நடைகளில் ஏதாவது ஒன்றை வளர்த்தாலே அது இன்று லாபம் கொழிக்கும் தொழில்தான். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த பாஸ்கர் ஆடு, மாடு, கோழி என மூன்றையும் வளர்த்து முறையான லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறார். தமிழகத்தின் தலைநகரான சென்னையையும், அண்டை மாநிலமான ஆந்திராவையும் இணைக்கும் பார்டர் பகுதியில் அமைந்திருக்கும் பாஸ்கரின் பண்ணைக்கு ஒரு காலைப்பொழுதில் சென்றோம். தனது கண்மணிகள்...
கால்நடைகளில் ஏதாவது ஒன்றை வளர்த்தாலே அது இன்று லாபம் கொழிக்கும் தொழில்தான். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த பாஸ்கர் ஆடு, மாடு, கோழி என மூன்றையும் வளர்த்து முறையான லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறார். தமிழகத்தின் தலைநகரான சென்னையையும், அண்டை மாநிலமான ஆந்திராவையும் இணைக்கும் பார்டர் பகுதியில் அமைந்திருக்கும் பாஸ்கரின் பண்ணைக்கு ஒரு காலைப்பொழுதில் சென்றோம். தனது கண்மணிகள் போல் கவனித்து வரும் கால்நடைகளுக்கு தீவனம் தயாரிப்புப் பணியில் தீவிரமாக இருந்தபோதும் நம்மை வரவேற்றுப் பேசினார் பாஸ்கர். ``எனக்கு சிறிய வயதில் இருந்தே கால்நடை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம்தான் இன்று ஆடு, மாடு, கோழிகளை வளர்க்க காரணமாக விளங்குகிறது. நம்மைப்போலவே கால்நடைகளும் ரசாயனப் பயன்பாட்டால் பல அவதிகளுக்கு உள்ளாகின்றன. இதைத் தவிர்ப்பதற்காக சோளம், கம்பு, அகத்தி, கேழ்வரகு உள்ளிட்டவற்றை நானே இயற்கை முறையில் பயிரிட்டு கால்நடைகளுக்கு தீவனமாக வழங்குகிறேன். இதனால் நான் வளர்க்கும் கால்நடைகள் நல்ல முறையில் ரசாயனக் கலப்படம் இல்லாத இயற்கையான தீவனத்தை உட்கொள்கின்றன. முதன்முதலாக 30 கோழிகளில் தொடங்கிய எனது பயணம் இன்றைக்கு 1500 கோழி என உயர்ந்திருக்கிறது. 10 கிடாவில் தொடங்கிய ஆடு வளர்ப்பு இன்றைக்கு 120 கிடாவாக உயர்ந்திருக்கிறது. ஈரோட்டில் இருந்து வாங்கி வந்த 3 மாடுகள் இன்றைக்கு 30 மாடுகளாக பெருக்கம் அடைந்திருக்கின்றன.
முதன்முதலில் கோழிகளை வாங்கியபோது உள்ளூரில்தான் வாங்கினேன். இவை அனைத்தும் சிறுவிடை நாட்டுக்கோழிகள். இந்தக் கோழிகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். சிறிய கூண்டில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வந்த நான் தற்போது 1600 சதுர அடியில் கொட்டகை அமைத்து கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். சேவல்களுடன் கோழிகள் மேய்வதற்கு 25 சென்ட் நிலத்தை ஒதுக்கி இருக்கிறேன். எங்களிடம் 350 சேவல், 700 பெட்டைக்கோழிகள், 450 கோழிக்குஞ்சுகள் உள்ளன. இதில் முட்டை வைக்கும் கோழிகளும், கோழிக்குஞ்சுகளும் மட்டுமே கொட்டகையில் இருக்கும். மற்ற கோழிகள் அனைத்தும் மேய்ச்சலில் இருக்கும். மேய்ச்சல் பகுதி முழுவதும் புற்கள் நிறைந்த பகுதி என்பதால் இயற்கையாகவே அதில் புழு, பூச்சிகள், கரையான் இருக்கும்.அதனால் கோழிகளுக்கு தேவையான புரதச்சத்து சாதாரணமாக கிடைக்கும். கோழிகளும் நல்ல ஊட்டமாக வளரும். இதுபோக நிலத்தில் வளரக்கூடிய கம்பு, சோளம், கீரை வகைகளை கோழிகளுக்கு தீவனமாக கொடுக்கிறேன். சோளத்தை அப்படியே கொடுத்தால் கோழிகளுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும். அதனால் சோளத்தை உடைத்துக் கொடுப்பேன். கொட்டகையைச் சுற்றி கம்பி அமைத்து, மேற்பரப்பில் சிமெண்ட் ஷீட்
போட்டிருக்கிறேன்.
வெயில் காலத்தில் கொட்டகையின் மேற்பரப்பில் தண்ணீர் விடுவோம். இதனால் கோழிகளுக்கு உடல் சூடு அதிகரிக்காது. கோழிகளுக்கு நாங்கள் அவையம் வைப்பது கிடையாது. அதற்கு மாற்றாக இன்குபேட்டரில் முட்டையை வைத்து பொரிக்க வைப்போம்’’ எனக் கூறிய பாஸ்கர் தனது ஆடு வளர்ப்பு குறித்தும் பகிர்ந்துகொண்டார்.எங்களிடம் தற்போது 100 ஆடுகள் உள்ளன. அனைத்தும் கிடா ஆடுகள்தான். இவை வெள்ளாடு ரகம் என்பதால் இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருக்கும். அதனால் தடுப்பூசி கூட போடுவது கிடையாது. கோழிகளுக்கு அமைத்துள்ளது போலவே ஆடுகளுக்கும் கொட்டகை அமைத்திருக்கிறேன். ஆடுகளை இரவு மட்டுமே கொட்டகையில் அடைப்பேன். மற்ற நேரங்கள் முழுவதும் மேய்ச்சலில் இருக்கும். ஆடுகளுக்கு பெரும்பாலும் சோளத்தட்டையும், கேழ்வரகும் மட்டுமே கொடுப்பேன். இது வயிற்று உப்புசத்தைக் குறைக்கும். வயிற்றுப்போக்கு வராமலும் காக்கும். ஒருவேளை ஆடுகளுக்கு வயிற்றுப்போக்கு வந்தால் அகத்திக்கீரை கொடுப்பேன்’’ எனக்கூறியபடி மாடுகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு நம்மை அழைத்துச்சென்றார்.
``இந்த மாடுகள் அனைத்தும் காங்கேயம் இனத்தைச் சேர்ந்தவை. காங்கேயம் நம் நாட்டு மாட்டு ரகத்தில் முதன்மையான ஒன்று. இதன் கழிவுகள் நிலத்திற்கு நல்ல உரம். எங்களிடம் இருக்கும் முப்பது மாடுகளில் 6 கறவை மாடுகள். 7 சினை. 9 இளம்பருவத்து மாடுகள். இதுபோக ஒரு கிர் மாடும், ஒரு ஓங்கோல் மாடும், 5 கன்றுக்குட்டிகளும் உள்ளன. ஆடுகளுக்கு கொடுக்கும் தீவனத்தையே மாடுகளுக்கும் கொடுக்கிறோம். இதுமட்டுமின்றி மாடுகளுக்கு நாங்கள் தயார் செய்த பெல்லட்டைக் கொடுப்போம். குறிப்பாக இளம் வயது மாடுகளுக்கு பெல்லட் கொடுப்பதன் மூலம் அவை ரொம்பவே ஆக்டிவாக இருக்கும். அனைத்துப்பசு மாடுகளுக்கு ஒரு காங்கேயன் காளை மாடு உள்ளது. அதனால் நாங்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவது கிடையாது. காங்கேயன் மாடுகளைப் பொருத்தவரையில் 1 பசுமாடு ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் பால் மட்டுமே கறக்கும். இந்தப் பாலை நாங்கள் அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் விற்பனை செய்துவிடுவோம். பாலில் மதிப்புக்கூட்டுப் பொருளாக பால்கோவாவும் தயார் செய்து வருகிறோம். மாடு எங்களுக்கு உரத்திற்கும், வீட்டுத் தேவைக்கும் மட்டும்தான். இதில் பெரிதாக வருமானம் கிடையாது.
கோழிகளைப் பொருத்தவரையில் கடந்த மாதம் மட்டும் 70 சேவல், 30 பெட்டைக்கோழிகள், 300 சிறுவிடைக் கோழிகுஞ்சுகளை விற்பனை செய்தேன். சேவலை ஒரு கிலோ ரூ.850க்கு விற்பனை செய்கிறேன். ஒரு சேவல் சராசரியாக 1.6 கிலோ இருக்கும். கடந்த மாதம் சேவல் விற்பனை மூலம் ரூ.90 ஆயிரம் கிடைத்தது. பெட்டைக்கோழியை ஒரு கிலோ ரூ.360 என விற்பனை செய்கிறேன். சரா சரியாக ஒரு கோழி 1.1 கிலோ இருக்கும். இதை விற்பனை செய்ததில் ரூ.11 ஆயிரம் கிடைத்தது. ஒரு சிறுவிடைக் கோழிக்குஞ்சை ரூ.80க்கு விற்கிறேன். கடந்த மாதம் கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்ததில் ரூ.24 ஆயிரம் கிடைத்தது.இதேபோல கடந்த மாதம் 70 கிடாய் ஆடுகளை விற்பனை செய்தேன். ஒரு கிடாய் ஆடு சராசரியாக 17 கிலோ இருக்கும். உயிருடன் ஒரு கிலோ 475 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். 70 கிடாய்களை விற்பனை செய்ததில் ரூ.5.6 லட்சம் வருமானமாக கிடைத்தது. தீவனச் செலவு பெரிதாக இல்லையென்றாலும் பராமரிப்பு, ஆட்கள் சம்பளம் ரூ.1.8 லட்சம் போக கோழி, ஆடு, மாடுகள் வளர்ப்பில் கிடைப்பது அனைத்தும் லாபம்தான்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
பாஸ்கர்: 72002 25154.
கோழிகளுக்கு கழிச்சல் வராமல் இருக்க 15 நாட்களுக்கு ஒரு முறை இஞ்சி, பூண்டு, வெற்றிலை, சின்ன வெங்காயம், மிளகு ஆகியவற்றை அரைத்து தீவனத்தோடு கலந்து வைப்பேன். இந்தக் கலவையோடு மஞ்சளும் சேர்த்து பதமான சுடுதண்ணீரில் கோழிகளுக்கு வைப்பேன்.