மனிதர்களுக்கு எப்படி உணவு அடிப்படைத் தேவையோ, அதேபோல கால்நடைகளுக்கு தீவனம் அடிப்படைத் தேவை. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படுமானால் அவை பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாக வாய்ப்பு ஏற்படும். கால்நடைகளுக்கு மிகவும் பிடித்த பசுந்தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க இதுபோன்ற டிப்ஸ்களை நாம் கையாளலாம். ஊறுகாய்ப்புல் பசும்புற்களை பசுமை மாறாமல் காற்றுப்புகாத சூழலில் நொதித்தல் முறையில் சேமித்து வைக்கும் முறைதான் ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறை. இம்முறையில் ஒரு பாலித்தீன் பையினுள் பசும்புல்லானது சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு வெல்லப்பாகுக் கரைசல், உப்புக்கரைசல் மற்றும் யூரியா கரைசல் தெளிக்கப்பட்டு காற்று இல்லாத அளவிற்குப் புல்லினை நன்கு அழுத்தி பாலித்தீன் பையினை இறுகக் கட்டிவிட வேண்டும். கட்டப்பட்ட பையினை 21-28 நாட்கள் திறக்காமல் வைத்துவிட வேண்டும். இந்த 28 நாட்களில் பசும்புல்லானது ஊறுகாய்ப்புல்லாக மாறிவிடும். பாலித்தீன் பையினை 28 நாட்களுக்கு பிறகு திறக்கும்பொழுது பசும்புல் பொன்னிறமாக மாறி இருக்கும். அப்போது புல்லிலிருந்து பழவாசனை வரும்.
ஊறுக்காய்ப்புல் தயாரிப்பது குறித்த விரிவான செயல்முறையினை அருகிலுள்ள கால்நடை மருத்துவர் அல்லது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையங்களை அணுகித் தெரிந்துகொள்ளலாம்.கறவைமாடுகளுக்குக் கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் ஒரே மாதிரியான தீவனங்களைக் கொடுக்கக் கூடாது. கோடைக்காலத்தில் அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் மாடுகள் அடர்தீவனத்தைக் குறைத்து உண்ணும். குளிர்க்காலத்தில் மாடுகளின் உடல் வெப்பநிலையினைப் பராமரிப்பதற்கு அதிக எரிசக்தி தேவைப்படும். எனவே எரிசக்தி அதிகமுள்ள (மக்காச்சோளம்) தீவனத்தினை அதிகமாகக் கொடுக்க வேண்டும். குளிர்க்காலத்தில் மாடுகள் உட்கொள்ளும் அடர் தீவனத்தின் அளவு அதிகரித்துக் காணப்படும்.
மாடுகளுக்கு மரஇலைகளைத் தீவனமாகக் கொடுக்காலம். மரஇலைகள் கோடைக்காலத்தில் பசுந்தீவனத்திற்கு மாற்றாக இருக்கும். ஆனால் பசுந்தீவனத்தின் மொத்த அளவினை மர இலைகளைக் கொண்டு ஈடுசெய்ய முடியாது. ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாளொன்றிற்கு 5 கிலோ மர இலைகளைத் தீவனமாக கொடுக்கலாம். மரஇலைகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கும். மரஇலைகளில் சில எதிர் ஊட்டச்சத்துக் காரணிகளாகிய டேனின், சுப்போனின் மற்றும் நிம்பின் இருப்பதால் மரஇலைகளை மாடுகளுக்கு அதிகம் கொடுக்கக்கூடாது. அதிகமாக மர இலைகளை மாடுகளுக்குக் கொடுக்கும்பொழுது மாடுகளில் வயிறு உப்புசம் மற்றும் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.