நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி
கூடலூர்/பெரியகுளம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, பெரியகுளம் அருகே, கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுருளி அருவி உள்ளது. இது சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு பூதநாராயணன் கோயில், வேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோவில், ஸ்ரீஐயப்பன் கோவில், கன்னிமார் கோயில் ஆகியவை உள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் சுருளி அருவிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளான தூவாணம் அணை, ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதிகளில் மழை பெய்யும்போது சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்படும். பொதுவாக அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். ஆனால், இந்தாண்டு போதிய மழை இல்லாமல் கடந்த ஏப்ரல் முதல் அருவியில் நீர்வரத்தின்றி வறண்டது. இதனால், அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை கொட்டியதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கோடை மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது.
கும்பக்கரையில் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இதன் நீர்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளக்கெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 நாட்களாக பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த 2 நாட்களாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. இந்த நிலையில், நேற்று நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதையடுத்து இன்று காலை முதல் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.