சேலம்: ஜாதி, மதம், கடவுள் பெயரில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக செயற்குழு, பொதுக்குழு பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அமமுக தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை நான் அரசியலுக்காக சந்திக்கவில்லை. அவரும் நானும் நண்பர்களாக இருக்கிறோம். நட்பு ரீதியில் அவரை சந்தித்து பேசினேன். இதில் அரசியல் ஏதும் இல்லை. நீதிமன்ற வழிகாட்டுதல்படி தான் விஜய் கூட்டத்திற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அதன்படி அவர் அந்த நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் முருகன் பெயரை சொல்லி எந்த ஒரு அரசியல் இயக்கமோ அமைப்புகளோ அரசியல் செய்யக்கூடாது.
அங்கு மதங்களை எல்லாம் கடந்து வாழ்கின்ற மக்களிடையே இதுபோன்ற குழப்பம் விளைவிப்பதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் தேவையற்ற பிரச்னையை உருவாக்கும். ஜாதி, மதம், கடவுள் பெயரால் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதை அரசியல் இயக்கங்கள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதை சீர்குலைக்கும். இதை அரசும், நீதிமன்றமும் சரியாக செய்யும் என்று நம்புகிறோம். ஓபிஎஸ் பற்றியோ அவரது கட்சியை பற்றியோ அவர் தான் பதில் சொல்ல வேண்டும். எங்களை போன்ற ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. அதனை நோக்கி தான் பயணித்து கொண்டிருக்கிறோம். சில கட்சிகள் எங்களோடு கூட்டணிக்கு வரவேண்டும் என பேசி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* வைத்திலிங்கம் கட்சி தாவுகிறாரா?
‘முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார். அது வதந்தி. இன்று கூட என்னிடம் பேசி வருத்தப்பட்டார். வரும் ஜனவரி 5ம் தேதி, அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. யார் எங்களை தொடர்பு கொள்கிறார்களோ?, அவர்களது அணுகுமுறையை பொறுத்து முடிவெடுப்போம்’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார்.


