சாதிய சக்திகளை ஒன்றாக எதிர்ப்போம் கலப்பு திருமணத்திற்கு மார்க்சிஸ்ட் துணை நிற்கும்: பாலகிருஷ்ணன் உறுதி
நெல்லை: ‘கலப்பு திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் ஆதரவு தெரிவிக்கும்’ என்று பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். கலப்பு திருமணத்தை நடத்தி வைத்ததால் நெல்லை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. இதை கண்டித்து நேற்று மாலை பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். முன்னதாக அவர் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒட்டு மொத்த சமூகமும் சாதி வெறி சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கிறது. சாதிகள் பெயரால் படுகொலைகள் நடப்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதியின் பெயரால் கொலைகள் நடப்பதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் கூலிப்படையை வைத்து சாதி வெறியை உருவாக்குவதும், கூலிப்படையை பயன்படுத்தி சமூக பிரச்னைகளை உருவாக்குபவர்களை அடையாளம் கண்டு களைய வேண்டும். சாதி மறுப்பு திருமணங்களை தொடர்ந்து நாங்கள் செய்து வைப்போம். அரசு இத்தகைய திருமணங்களை முடிப்போருக்கு, தங்குவதற்கு பாதுகாப்பான இடம் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.