சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும்: பாமக மகளிர் மாநாட்டில் தீர்மானம்
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு நேற்று மாலை நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் ராமதாசின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, பேரன் முகுந்தன், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, அரசியல் குழு தலைவர் தீரன், இணை செயலாளரும் எம்எல்ஏவுமான அருள், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சக்திவேல், பாமக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் துரை கோபி மற்றும் திரளான பாமகவினர் பங்கேற்றனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி தடை செய்ய வேண்டும்.
* நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள், சோதனை என்ற பெயரால் மன வேதனைக்கு உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
* பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதால் அதை தடுத்தி பெண் காவலர்கள் ஆங்காங்கே நியமிக்கப்பட வேண்டும்.
* 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கிராமப்புற, நகர்ப்புற ஏழை-எளிய, பெண்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேலை நாட்களின் எண்ணிக்கையும், தினக்கூலியையும் அதிகப்படுத்த வேண்டும்.
* மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பெற கூடுதலாக மகளிர் பல்கலைக்கழகம் தனியாக உருவாக்கப்பட வேண்டும்.
* வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை சரியாக நிர்ணயித்திட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* அன்புமணி படம் புறக்கணிப்பு
மாநாடு நடந்த திடலில் மிகவும் பிரமாண்டமான நுழைவு வாயில் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் படம் மட்டுமே இருந்தது. ஆனால் அன்புமணி படம் இல்லை. அதேபோல் மாநாடு மேடையிலும் ராமதாஸ் படம் மட்டுமே இருந்தது. அதில் அன்புமணி படம் இடம்பெறவில்லை. ஏற்கனவே, மாநாடு நோட்டீசிலும் அன்புமணி படம் புறக்கணிப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
* பெண் பவுன்சர்கள்
மகளிர் மாநாடு என்பதால் மாநாட்டு பந்தலில் 100க்கும் மேற்பட்ட பெண் பவுன்சர்கள் அதிகமாக காணப்பட்டனர். மாநாட்டு மேடையிலும் பெண் பவுன்சர்கள் அதிகமாக இருந்தனர். அவர்கள் முக்கியமான கட்சி நிர்வாகிகளை மட்டுமே மேடைக்கு அனுமதித்தனர்.