எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறார் சாதிப்பெயர் விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக அவதூறு பரப்பும் எடப்பாடி: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
காரியாபட்டி: சாதிப்பெயர்களை நீக்கும் விவகாரத்தை அரசியல் லாபத்திற்காக எடப்பாடி பயன்படுத்துவதாக கூறி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களை செய்வதோடு, சமூக நல மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது.
தமிழகத்தில் சமூகநீதியை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1978ம் ஆண்டு தமிழகத்தில், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் என்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டது. இத்தகைய சமூக நீதியை கடைபிடித்து, பிரிவினை ஏதும் இல்லாமல் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளோடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சமீப காலமாக முதல்வர் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறார்.
அவரது மாலை நேர பிரசார பயணத்தின்போது ஏதாவது பேசுவதற்கு சப்ஜெக்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசு மீது பல்வேறு அவதூறுகளை பேசி வருகிறார். தமிழக அரசின் திட்டங்களை கொச்சைப்படுத்தி தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார். நாட்டில் அரசு கொண்டு வரும் திட்டத்தில் பிரச்னை ஏதேனும் இருந்தால், அவற்றை தீர்ப்பதற்காக பங்களிப்பு தந்தால் அதை நாம் வரவேற்கலாம். தமிழகத்தில் தெருக்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள், உட்கட்டமைப்புகளில் சாதிப்பெயர்களை நீக்கி பொதுவான பெயர்கள் சூட்ட வேண்டும என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பொதுவாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட பட்டியலில் மலர்கள் பெயர்கள், தமிழ்நாட்டு உரிமைக்காக போராடிய உத்தமர்கள், தியாகம் செய்தவர்கள் பெயர்களை வைக்கலாம் என்று பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டு, எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்தை சிறுமைப்படுத்தி பேசுகிறார். நல்ல நோக்கத்தோடு கொண்டு வரும் இந்த சமூகநீதி திட்டத்தால் மக்கள் பெரிதும் வரவேற்பு கொடுப்பார்கள். முதல்வருக்கும், அரசுக்கும் நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்ற நோக்கத்தோடு அவதூறாக பேசி வருகிறார்.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி வேறு சில கட்சித் தலைவர்களும் இதேபோல் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் அரசியல் லாபம் காணலாம் என எண்ணுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏதாவது ஒன்றை சொல்லி தமிழ்நாடு அரசின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் உண்மைக்கு மாறாக கருத்துகளை எடப்பாடி பழனிசாமி திரித்துக் கூறுகிறார். எனவே எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், அந்த நிலையை பின்பற்றும் வேறுசில அரசியல் தலைவர்களும் உண்மை நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தினுடைய ஏற்ற தாழ்வுகளினால் நிகழும் அநீதிகளை முற்றிலுமாக நீக்கக்கூடிய, சமூக நீதியின் அடிப்படை பயணமாக இந்த அரசாணையை வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாக அமைந்து விடும்.இவ்வாறு கூறினார்.
* ஜி.டி.பாலம் என்ற பெயரை வைக்க முடியும்?
‘கோவையில் உயர்மட்ட பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கு நாயுடு என்ற பெயர் வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். முதல்வர் உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கி உள்ள திட்டங்களுக்கு வேறு வண்ணம் பூசக்கூடிய வகையில் பழித்துப் பேசி வருகிறார். இது முழுமையாக கண்டிக்கத்தக்கது. சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரத்தினை, எடப்பாடி பழனிச்சாமி அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார். ஜி.டி.நாயுடு முக்கியமான விஞ்ஞானி என்பதாலும், அந்தப் பகுதியை சார்ந்தவர் என்பதாலும் அவரது பெயர் பாலத்திற்கு சூட்டப்பட்டது.
இது மாபெரும் விஞ்ஞானியை போற்றுதலுக்கான அடையாளமாகும். இது பலதரப்பட்ட மக்களால் வரவேற்கப்பட்டும் இருக்கிறது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஜி.டி.நாயுடு என்பதை சமூக பெயராக சுட்டிக்காட்டி வருகிறார். அதற்காக ஜி.டி பாலம் என்றா வைக்க முடியும்?. இது போன்ற அறிஞர்கள் வாழ்ந்த காலத்தில் அறியப்பட்ட பெயரினை வைப்பதன் மூலமே அவர் யார் என்று அறிய முடியும். முன்னதாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள தெருக்களின் பெயர்களுக்கு திராவிட இயக்கத்தின் தலைவராக இருந்த டி.எம்.நாயர் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் நாயர் என்ற சாதிப்பெயர் வருவதால் நீக்கி விட்டு டி.எம் என வைத்தால் அது யாராக அறியப்படும்? அது எந்த ஒரு பொருளும் தராது. ஆகையால் தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்களோ அதே பெயரை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்படுகிறது. இவை விதிவிலக்காக கருதப்பட வேண்டும்’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.