தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பாமக இளைஞர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: பாமக இளைஞர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று நடந்தது. பாமக தலைவர் அன்புமணி முன்னிலை வகித்தார். பாமக இளைஞர் சங்கத்தின் தலைவர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.
* தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்.
* தமிழகத்தில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், அரசு கல்லூரிகளின் கல்வித்தரம் சீரழிந்து மாணவர்கள் சேருவதற்கு முன்வராத அவல நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில் முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.
* தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
* வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி டிசம்பர் 17ம் தேதி அன்று போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு துணை நிற்க உறுதி ஏற்றுக் கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.