சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்குவதை இழிவுபடுத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுகளின்படி ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் இதுகுறித்து பேசப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு;
தமிழ்நாட்டில் தெருப் பெயர்களில் உள்ள ஜாதியை நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவினரை இழிவுப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடியின் மாலை நேர பரப்புரை கூட்டங்களுக்கு ஏதாவது பேச தேவைப்படுகிறது. அரசியல் லாபத்திற்காக எடப்பாடி பழனிசாமி குறுக்குசால் ஓட்டுகிறார். நல்ல திட்டங்களையும் அரசியல் நோக்கத்துக்காக எடப்பாடி திரித்து பேசி வருகிறார். முதல்வர் நல்ல நோக்கத்துக்காக செய்வதை இழிவுபடுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. ஜாதிப் பெயர்களை நீக்குவதை எடப்பாடி பழனிசாமி சிறுமைப்படுத்தி பேசுகிறார். இந்த பெயரைதான் வைக்க வேண்டுமென அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
21 நாட்களுக்குள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜாதிப் பெயர்கள் மாற்றப்படும். பெயர்கள் வைப்பது குறித்து அரசாணையில் வெளியிடப்பட்டது உதாரணம் மட்டும்தான். குறிப்பிட்ட தலைவர்களின் பெயரைத்தான் வைப்பதாக எடப்பாடி சொல்வது தவறானது. கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததை குறையாக சொல்வதா?. ஜி.டி.நாயுடு பாலம் என்று வைத்தால்தான் அவர் யார் என்பதை அறிய முடியும். ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் ஏன் வைக்கப்பட்டது, அது விதி விலக்கு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.