Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் வேண்டாம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள் பெயர்களில் உள்ள சாதி அடையாள பெயர்களை நீக்குவதாக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தமிழகத்தில் உள்ள பல சமூக மக்கள் இடத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முன்னோர்கள் பலர் தமது பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பல ஏக்கர் நிலங்களை கல்விக் கூடங்களுக்கு தானமாக கொடுத்தும், மக்களின் பொது செயல்பாடுகளுக்காகவும் பல கொடைகளை வழங்கி பல பகுதிகளை வளர்ச்சி அடைய செய்துள்ளனர். அவர்கள் நினைவாகவும், அவர்களை போற்றி நினைவு கூறும் வகையில் அவர்களின் பெயர் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் குல பெயர் உடன் முழுமையாக பெயரை கொண்டு அவர்கள் பெயர் அந்த பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சூட்டப்பட்டது. அதுபோல் விடுதலைப் போராட்ட வீரர்கள், மொழி, மண், மக்களுக்காக போராடிய தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களின் பெயர்கள் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் சமுதாய மற்றும் குல பெயர் உடன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரு தெருவில், ஒரு ஊரில் குழுவாக நல் உறவு உடன் வசிக்கின்ற மக்கள் அடையாளமாகவும் அந்த பகுதிக்கு அவர்கள் சமூக பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சாதிய பெயர்களை நீக்குவதாக கூறி அரசு ஒட்டுமொத்தமாக பல சமூகங்களின் அடையாளத்தையே நீக்குவது சமூக ஒற்றுமைக்கும், பல ஆண்டு கால கலாச்சார நடைமுறைக்கும் எதிராக உள்ளது. நமது முன்னோர்கள் செய்த தியாகங்களையும் சீர்குலைத்து அவர்கள் நினைவுகளை மறைக்க வழி செய்வது போல் உள்ளது.

இவ்வாறு பெயர் நீக்குவதிலும் புதிய பெயர் சூட்டுவதிலும் ஆங்காங்கே முரண்பாடுகள் அந்த பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதேசமயம் ஒரு சமுதாயத்தின் பெயர் நீக்கப்படும் இடத்தில் அதே சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் பெயர்தான் சூட்டப்பட வேண்டும். அப்போது தான் அந்தப் பகுதி மக்களிடத்தில் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வரும். இது அனைத்து சமுதாயப் பெயர்களுக்கும் பொருந்தும். அந்தந்த பகுதி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் முழு பெயர்களை அந்தந்த பகுதியில் தான் சூட்ட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நினைவுகளை அந்த பகுதி மக்கள் நினைவு கூறுவார்கள். அதை தவிர்த்து தன்னிச்சையாக பெயர் சூட்டுவது ஏற்புடையது அல்ல.

சமூக அடையாளத்துடனான ஊர்கள், தெருக்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. காலங்காலமாக இருக்கின்ற இந்த பெயர்களை எல்லாம் நீக்குவது தமிழக மக்கள் இடத்தில் குழப்பத்தையும், முரண்பாடுகளையுமே ஏற்படுத்தும். எனவே அரசு இந்த விவகாரத்தில் நிதானமாக பொறுமையை கையாண்டு, அந்தந்த பகுதி மக்களின் கருத்தறிந்து முறையாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.