சென்னை: புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு சுகாதாரமான உணவு மற்றும் முறையான மருத்துவ வசதி வழங்காதது குறித்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பைசல் ஹமீது என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்தாண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யபட்டு புழல் சிறையில் உள்ள தம்மை தனி சிறையில் வைத்து கொடுமை செய்கிறார்கள். அடிப்படை தேவைகளான சோப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்க மறுக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள புழல் சிறையில் சரியான நேரத்திற்கு கைதிகளுக்கு உணவு வழங்குவதில்லை. சுகாதாரமற்ற உணவு வழங்குகிறார்கள். முறையான மருத்துவ வசதி இல்லை. சிறைக்கு புதிதாக வரும் விசாரணை கைதிகளை சமையல் மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள்.
இதுதொடர்பாக புகார் அளித்த தம்மை தனி சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். என்னுடைய குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுக்கிறார்கள். இதுதொடர்பாக உள்துறை கூடுதல் தலைமை செயலாளரிடம் கடந்த ஜூன் மாதம் மனு அளித்தும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.