மதுரை: சிறப்பு வீட்டு உதவி திட்டத்தை உருவாக்கக் கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு முழுவதும் ஒதுக்கீடு செய்யாமல் உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான இலவச வீட்டுமனை குறித்த விபரங்களை சேகரித்து, தகுதியான பட்டியலின பயனாளிகளை கண்டறிந்து இலவச வீட்டுமனையை ஒதுக்கீடு செய்யுமாறும், தமிழ்நாடு ஆதிதிராவிட குடியிருப்பு மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கீழ், ஒன்றிய, மாநில அரசின் நிதி உதவியுடன் ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தது ரூ.5 லட்சம் வழங்கும் வகையில் சிறப்பு வீட்டு உதவி திட்டத்தை உருவாக்கி, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா, நீதிபதி பூர்ணிமா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டதால் விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.