உச்சநீதிமன்றத்தில் 90 ஆயிரம் வழக்குகள் நிலுவை; மீண்டும் ‘வாய்தா’ கேட்பது சாமானிய மக்களை பாதிக்கும்: வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பிய நீதிபதிகள்
புதுடெல்லி: வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய வழக்கறிஞரை, நீதிமன்றத்தில் குவிந்துள்ள நிலுவை வழக்குகளைச் சுட்டிக்காட்டி நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். நீதித்துறையில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உச்சநீதிமன்றத்தில் மட்டும் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழலில், காரணமின்றி விசாரணையை ஒத்திவைக்கும் ‘வாய்தா’ கலாசாரம் குறித்தும், அதனால் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்தும் நீதிபதிகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
புதிதாகப் பதவியேற்றுள்ள தலைமை நீதிபதி சூர்யா காந்தும், நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதே தனது முதல் மற்றும் முக்கியமான பணி என்று முன்னரே அறிவித்துள்ளார். இந்நிலையில், காபி கொட்டைகள் திருடப்பட்ட விவகாரம் மற்றும் அத்துமீறல் தொடர்பான கிரிமினல் வழக்கு, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூடுதல் அவகாசம் கேட்டதால் அதிருப்தியடைந்த நீதிபதி நாகரத்னா, ‘இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இது விரைவில் ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும். இதற்கு யார் பொறுப்பு?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ‘வாய்தா வாங்குவது வழக்கறிஞர்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம்; ஆனால், சரியான நேரத்தில் நீதியை எதிர்பார்க்கும் சாமானிய மக்களுக்கு இது உதவாது; வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துவது மனுதாரர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று கூறிய நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த வழக்கைச் சமரசத் தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவிட்டனர்.


