பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உயிரிழந்த வடமாநில தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி நேற்று சக தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, கற்களை வீசி தாக்கிய 29 பேர்மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் உ.பியை சேர்ந்த அமரேஷ் பிரசாத் (35) என்பவர் ஒப்பந்த கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு தங்கும் குடியிருப்பில் அமரேஷ் பிரசாத் மாடியேறும்போது கீழே தவறி விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து அமரேஷ் பிரசாத்தின் சகோதரர் அளித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, ஊழியர் குடியிருப்பில் இறந்த வடமாநில தொழிலாளி அமரேஷ் பிரசாத்தின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனத்திடம் உ.பியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்குவதாக உறுதியளித்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு விசாரணைக்காக ஊழியர்களின் குடியிருப்பு பகுதிக்கு காட்டூர் போலீசார் சென்றுள்ளனர். அங்கு வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, அவர்கள்மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியுள்ளனர். மேலும், காட்டுப்பள்ளி தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பதட்ட சூழல் நிலவியதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்மீது கற்களை வீசி தாக்கியதில், செங்குன்றம் துணை ஆணையர் பாலாஜி உள்பட 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
மேலும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட 4 பேர்மீதும் கற்கள் வீசப்பட்டதில் காயம் ஏற்பட்டது. இதனால் கண்ணீர் புகை குண்டு வீசி, கற்களை வீசி தாக்கிய நபர்கள்மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதுகுறித்து 100க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி அட்டூழியத்தில் ஈடுபட்ட இடத்தில் ஆவடி காவல் ஆணையரக ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு நடத்தினார். இதற்கிடையே, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்கள்மீது கற்களை வீசி தாக்கியதாக 29 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று அதிகாலை வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் வடமாநிலத் தொழிலாளர்கள்மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்பட 8 பிரிவுகளின்கீழ் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.