பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத சதுர்வேதி சாமியார் மீது வழக்குப்பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னை: பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் பகுதியில் ஸ்ரீராமனுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் வெங்கட சரவணன் (எ) பிரசன்ன வெங்கடா சதுர்வேதி சாமியார் என்பவர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். இவர் தன்னை ‘கிருஷ்ணனின் அவதாரம்’ என்று அறிவித்து கொண்டு சதுர்வேதி சாமியார் என்ற பெயரில் வலம் வந்தார். அந்த வகையில் தி.நகரில் உள்ள அறக்கட்டளையில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஆன்மிக சொற்பொழிவை சாமியார் நடத்தி வந்தார். இவரது சொற்பொழிவை கேட்க வெளி மாநிலங்களில் இருந்து தொழிலதிபர்கள், ஒன்றிய அரசு அதிகாரிகள் என பலரும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். அவரது சொற்பொழிவை கேட்க வந்த இளம் பெண்கள் பலரை, சொற்பொழிவு முடிந்த உடன் தனது அறைக்கு அழைத்து ‘நான் தான் கிருஷ்ணன்’ என்று கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து சில பெண்கள் அப்போதே போலீசில் புகார் அளித்தனர். ஆனால் சாமியார் சதுர்வேதி அதிகாரிகள் மத்தியில் அதிகாரம் படைத்த நபராக இருந்ததால், புகார் அளித்த பெண்களை சமாதானப்படுத்தி பாலியல் புகார்களை வாபஸ் பெற வைத்துள்ளார். அத்தோடு இல்லாமல், சாமியார் சதுர்வேதியால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை தன் வசப்படுத்தி தன்னுடன் ஆசிரமத்திலேயே வைத்து கொண்டார். அவர்களை சம்பந்தப்பட்ட இளம் பெண்களின் பெற்றோர் பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்து மீட்டு சென்றதாகவும், பலரிடம் சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கி கொண்டதாகவும் சாமியார் சதுர்வேதி மீது பல புகார்கள் எழுந்தன. இத்துடன் மோசடி வழக்கு ஒன்றும் சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதையடுத்து மோசடி வழக்கில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சதுர்வேதி சாமியார் கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதை தொடர்ந்து 27.6.2023ம் ஆண்டு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், சதுர்வேதி சாமியரை மோசடி வழக்கில், பொது அறிவிப்பு குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 82(2) ன் கீழ் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை சாமியார் சதுர்வேதி எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.இதனிடையே ஆன்மீக சொற்பொழியால் ஈர்க்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் 16 வயது மகளுடன் சந்தித்து ஆசீர்வாதம் பெற வந்தார். அப்படி வந்த போது, தொழிலதிபரின் மனைவி மற்றும் அவரது 16 வயது மகளை சதுர்வேதி தன் வசப்படுத்தி, தனது சீடர்களாக மாற்றியுள்ளார். பின்னர் தொழிலதிபரின் வீட்டிற்கு அடிக்கடி சதுர்வேதி வந்து, பூஜைகள் செய்வதாக கூறி அவரது மனைவி மற்றும் மகளை பல முறை பாலியல் பலாத்காரம் செய்து தொழிலதிபரின் மனைவி, மகள் மற்றும் அவரது வீட்டையும் அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் தொழிலதிபர் மனைவி மற்றும் அவரது 16 வயது மகளை நேபாளத்திற்கு கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர், சாமியார் சதுர்வேதி மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்திய போது, சாமியார் சதுர்வேதி தொழிலதிபர் மனைவி, மகளை சொற்பொழிவுக்காக நேபாளத்திற்கு அழைத்து சென்று அங்கு இருவரையும் தனி அறையில் அடைத்து தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து சாமியார் சதுர்வேதி மீது கற்பறிப்பு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2004ம் ஆண்டே வழக்கு பதிவு செய்து, தனிப்படை போலீசார் நேபாளம் சென்று சாமியார் சதுர்வேதியை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து தொழிலதிபரின் மனைவி, மகளை போலீசார் மீட்டனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து சாமியார் சதுர்வேதியை போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் மூலம் நிபந்தனை ஜாமீனில் சதுர்வேதி வெளியே வந்தார்.
சதுர்வேதி கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரால் பாதிக்கப்பட்டு சொத்துகளை இழந்த பலர் சாமியார் சதுர்வேதி மீது மீண்டும் புகார்கள் அளித்தனர். அந்த வகையில் சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 4 வழக்குகள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்டது. மேலும், தொழிலதிபர் மனைவி, மகள் பாலியல் வழக்கில், சதுர்வேதி சாமியார் மீது போலீசார் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் திடீரென கடந்த 2016ம் ஆண்டு தாம் மீண்டும் கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சத்தில் அவர் தி.நகர் ஆசிரமத்தில் இருந்து திடீரென தலைமறைவானார். பிறகு போலி சாமியார் சதுர்வேதிக்கு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. போலீசார் சதுர்வேதியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பிறகு சதுர்வேதியை கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சாமியார் சதுர்வேதி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் நேரில் ஆஜராவதாக மனுதாக்கல் செய்தது.
அதை தொடர்ந்து மகளிர் நீதிமன்றம் சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததை திரும்ப பெற்றது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி சாமியார் சதுர்வேதி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படும் என எச்சரித்த நிலையில் சதுர்வேதி சாமியாருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. பலமுறை சம்மன் அளித்தும் சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் சதுர்வேதி சாமியார் ஆஜராகவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாததை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சதுர்வேதி சாமியார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.