வழக்கு விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு ரவுடி தப்ப முயற்சி: கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: வழக்கு விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீஸ்காரரின் கையில் கத்தியால் குத்திய ரவுடி, தனது கழுத்தையும் அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்தவர் மாரி என்ற மரியராஜ் (40). இவர் மீது மல்லி, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மல்லி, கிருஷ்ணன்கோவில் காவல்நிலையங்களின் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் மரியராஜ் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதனால் மல்லி போலீசார், மரியராஜை தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீஸ்காரர் வினோத் நேற்று காலை வடபட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த மரியராஜை பிடித்து, விசாரணைக்காக டூவீலரில் அழைத்து வந்துகொண்டிருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிவகாசி சாலையில் தனியார் கல்லூரி பகுதியில் வந்தபோது, டூவீலரின் பின்னால் அமர்ந்திருந்த மரியராஜ் திடீரென மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து, போலீஸ்காரர் வினோத்தின் இடது கையில் குத்தியுள்ளார். இதில், போலீஸ்காரர் நிலைகுலைந்ததால் வண்டியில் இருந்து குதித்து மரியராஜ் தப்பி ஓடினார். அவரை வினோத் விரட்டிப் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரியராஜ் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்துக்கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மரியராஜை மடக்கிப் பிடித்தனர். அவரையும், போலீஸ்காரர் வினோத்தையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

