Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தரமற்ற காரை விற்பனை செய்ததாக கூறி ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்கு: ராஜஸ்தான் வாடிக்கையாளர் அதிரடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தரமற்ற காரை விற்பனை செய்து ஏமாற்றியதாக பிரபல நிறுவனம், அதன் உரிமையாளர்கள் மற்றும் விளம்பரத் தூதர்களான ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வாடிக்கையாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளதார். ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரைச் சேர்ந்த கீர்த்தி சிங் (50) என்பவர், கடந்த 2022ம் ஆண்டு சோனிபட்டில் உள்ள பிரபல கார் நிறுவன டீலரிடம் இருந்து சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியுள்ளார். கார் வாங்குவதற்கு முன்பு, எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் சரிசெய்து தரப்படும் என்று அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஆனால், காரை வாங்கிய சில நாட்களிலேயே அதில் ஏற்பட்ட கடுமையான தொழில்நுட்பக் கோளாறுகளால் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. காரின் வேகத்தை அதிகரிக்கும்போதோ அல்லது முந்திச் செல்ல முயலும்போதோ, காரில் ஒருவித அதிர்வு ஏற்படுகிறது; ஆனால் வேகம் மட்டும் அதிகரிக்கவில்லை.

மேலும், காரின் டிஜிட்டல் திரையில் ‘இன்ஜின் அமைப்பில் கோளாறு’ என்று எச்சரிக்கை செய்தி தொடர்ந்து வந்துள்ளது. இந்தக் குறைபாடு குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்தபோது, இது சரிசெய்ய முடியாத உற்பத்திக் குறைபாடு என்பதை ஒப்புக்கொண்ட நிறுவனப் பிரதிநிதிகள், பிரச்னை ஏற்படும்போதெல்லாம் காரை அவ்வப்போது சரிசெய்து கொடுத்தும், அபத்தமான சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். பிரச்னை செய்யும் காரை மாற்றித் தரவோ அல்லது பணத்தைத் திரும்பத் தரவோ அந்த நிறுவனம் மறுத்ததால், கீர்த்தி சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை புகாரைப் பதிவு செய்ய மறுத்ததால், அவர் நீதிமன்றத்தை நாடினார். உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், மதுரா கேட் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிஎன்எஸ்-யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பிரபல கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்சோ கிம், மூத்த அதிகாரி தருண் கார்க், டீலர்ஷிப் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குறைபாடுள்ள காரை விளம்பரப்படுத்தி, மக்களைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறி, விளம்பரத் தூதர்களான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகியோரையும் குற்றவாளிகளாகச் சேர்த்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், பழுதான காருக்கான மாதத் தவணையைத் தொடர்ந்து செலுத்தி வருவதாகவும், இதனால் தனக்கு நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கீர்த்தி சிங் வேதனை தெரிவித்துள்ளார். கார் விளம்பரத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது வழக்குபதியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.