ராஞ்சி: ஜார்கண்ட் வைத்தியநாதர் கோயில் கருவறைக்குள் விதிகளை மீறி நுழைந்ததாக பாஜக எம்.பி.க்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம், தேவ்கர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பாபா வைத்தியநாதர் கோயிலில் சிராவண மாதத்தையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முக்கியப் பிரமுகர்களுக்கான தரிசன நேரத்திலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 2ம் தேதி, இந்த விதிகளை மீறி பாஜக எம்.பி.க்களான நிஷிகாந்த் துபே மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களது செயல் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக மாநிலக் காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.