ஆசம்கர்: கொலை, கொள்ளை, மாடு கடத்தல் உட்பட 67 வழக்குகளில் தொடர்புடைய, தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்த பிரபல குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆசம்கர், கோரக்பூர், குஷிநகர், சந்த் கபீர் நகர் மற்றும் ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கால்நடை கடத்தல் மற்றும் திருட்டு என 67 வழக்குகளில் தொடர்புடைய பிரபல குற்றவாளி வக்கீப்பை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில், இவரது தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘வக்கீப் மீது ஆசம்கர், கோரக்பூர், குஷிநகர், சந்த் கபீர் நகர் மற்றும் ஜான்பூர் மாவட்டங்களில் மட்டும் கொலை, கொள்ளை, கால்நடை கடத்தல் மற்றும் திருட்டு தொடர்பாக குறைந்தது 67 வழக்குகள் இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆசம்கர் மாவட்டம், ஜோகஹ்ரா கிராமத்தில் உள்ள சோட்டி சரயு ஆற்றின் அருகே தேடப்படும் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை, ஆசம்கர் அதிரடிப் படை மற்றும் சிதாரி போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களைச் சுற்றி வளைத்தனர். அப்போது, குற்றவாளிகள் திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. போலீசார் தற்காப்புக்காக நடத்திய பதிலடித் துப்பாக்கிச் சூட்டில் வக்கீப் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுடன் இருந்த மேலும் மூன்று கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’ என்றார்.

