தீபாவளி பண்டிகையையொட்டி ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 6 மாதம் சிறை: தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்லும் சம்பவங்களை தடுக்க தெற்கு ரயில்வே கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது: பண்டிகை காலங்களில் சிலர் பட்டாசுகள், பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை தங்களுடன் எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. சிறிய பிழையால்கூட பெரும் விபத்துக்கு காரணமாக மாறக்கூடும். எனவே, தீவிபத்து ஏற்படுத்தும் எந்தவொரு பொருளையும் ரயிலில் கொண்டு செல்வது கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து, முக்கிய நிலையங்களிலும் ரயில் நிலைய புறங்களிலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். பயணிகளின் பைகளில் சோதனை மேற்கொள்வதோடு, அறிவிப்புகள் மற்றும் போஸ்டர்களின் மூலமாகவும் எச்சரிக்கை செய்யப்படுகிறது.
பெரும்பாலானோர் விதிகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் சிலர் வியாபார நோக்கத்திற்காக பட்டாசு போன்ற பொருட்களை மறைமுகமாக கொண்டு செல்வது வழக்கமாகிவிட்டது. இத்தகைய செயல்கள் பலரின் உயிருக்கு ஆபத்து உள்ளாக்கக்கூடும். எனவே, எந்த நிலையிலும் விதிமீறல் சகித்துக்கொள்ளப்படாது. தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்றதாக முதன்முறையாக பிடிபடுபவர்கள் மீது ரூ.1,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதேசமயம், மீண்டும் இதே குற்றத்தில் சிக்கினால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், ரயில் பயணிகள் தங்கள் பாதுகாப்புக்காக சந்தேகமான பொருட்கள் அல்லது பயணிகளை கண்டால் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு உதவி எண்களான 139 அல்லது 182க்கு தகவல் தருமாறு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.