Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கேரம் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

சென்னை: மாலத்தீவில் 7வது கேரம் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில், 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியில் தமிழகத்தை சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோர் இடம்பெற்றனர். இதில் மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய 3 பிரிவுகளிலும் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா தங்கப்பதக்கம் வென்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் கீர்த்தனா, இந்தியாவின் மற்றொரு வீரங்கனையான காஜல் குமாரியை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் கீர்த்தனா - காஜல் குமாரி ஜோடி, மற்றொரு இந்திய ஜோடியான மித்ரா - காசிமாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோல கீர்த்தனா உட்பட 4 பேர் கொண்ட மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி மாலத்தீவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களும், காசிமா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களும், மித்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களும் வென்றனர். இந்நிலையில் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த வீராங்கனைகள் கீர்த்தனா காசிமா மித்ரா ஆகியோர் விமான மூலம் நேற்று சென்னை வந்தனர்.

அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து வீராங்கனை கீர்த்தனா கூறுகையில், ‘இந்தியாவுக்காக விளையாடி மூன்று தங்கப் பதக்கங்கள் பெற்றுக் கொடுத்ததில் மிகுந்த பெருமைப்படுகிறேன். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னை உற்சாகப்படுத்தி, அனுப்பி வைத்தார்.

நான் இந்த போட்டியில் கலந்து கொள்ள எவ்வாறு செல்வேன், என்று எங்கள் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு கலங்கி நின்ற போது, துணை முதலமைச்சர் ரூ.1.5 லட்சம் கொடுத்ததால் தான், என்னால் மாலத்தீவு சென்று போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. எங்கள் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். நான் பத்து வரை தான் படித்திருக்கிறேன். எனவே எனக்கு ஏதாவது அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

எங்கள் வீட்டில் படுக்க கூட இடம் இல்லை. எனவே எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு ஏற்பாடு செய்து தர வேண்டும். நான் இப்போது போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தது போல், நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற இளைஞர்களும் ஆர்வமாக நாட்டுக்காக விளையாடி, நாட்டிற்கு பதக்கங்கள் பெற்று கொடுத்து பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.