மாலே: மாலத்தீவில் நடந்த உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனா, 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். மாலத்தீவின் மாலே நகரில் 7வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனா, காஸிமா உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள், வெளிநாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழு போட்டிகள் மூன்றிலும் கீர்த்தனா சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒற்றையர் இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை காஜல் குமாரியை எதிர்கொண்ட கீர்த்தனா, சாதுரியமாக ஆடி சிறப்பான வெற்றியை பதிவு செய்து தங்கம் வென்றார். இரட்டையர் பிரிவில், கீர்த்தனா, காஜல் குமாரி இணை, சக இந்திய இணையான மித்ரா, காஸிமாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
அணி போட்டியில் 4 வீராங்கனைகள் கொண்ட இந்திய அணியில் கீர்த்தனா இடம்பெற்றார். இந்த போட்டியிலும் இந்திய குழு தங்கம் வென்றது. கீர்த்தனா, காசிமேட்டை சேர்ந்த மற்றொரு வீராங்கனை காஸிமாவின் தந்தை மெஹபூப் பாஷாவிடம், தனது 8 வயதில் இருந்து கேரம் பயிற்சிகள் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. காஸிமா, மாலத்தீவு கேரம் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் வெண்கலம், இரட்டையர் பிரிவில் வெள்ளி, அணி பிரிவில் தங்கம் வென்றார்.


