திருவண்ணாமலை: ஆரணி அருகே கொய்யாப்பழம் ஏற்றிவந்த சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் உயிரிழந்தனர். ஆரணி அருகே கொங்கரம்பட்டு ஆரணி - வேலூர் சாலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதி 2 பேர் பலியாகியுள்ளனர். ஆரணியில் இருந்து தனியார் வங்கி மேலாளர் மணிகண்டன் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அவரது உறவினர் வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தனர். அப்போது வேலூரில் இருந்து ஆரணி மார்க்கெட்டுக்கு கொய்யாப்பழம் ஏற்றிவந்த லோடு லாரி நிலை தடுமாறி எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அங்கு இருக்கும் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து, 108 அம்புலன்ஸல் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மணிகண்டன், அமுதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த மணிகண்டனின் மனைவி மஞ்சுளா வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய லோடு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில இருந்து தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து வந்த கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.