திருவனந்தபுரம்: பம்பை அருகே இன்று அதிகாலை ஐதராபாத்தை சேர்ந்த சபரிமலை பக்தர்கள் சென்ற கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த 4 பக்தர்கள் நேற்று சபரிமலை தரிசனத்திற்காக புறப்பட்டனர். கொச்சி வரை விமானத்தில் வந்தவர்கள் அங்கிருந்து வாடகை காரில் சபரிமலைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பம்பை அருகே சாலக்கயம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காரில் இருந்து புகை வந்தது. அதை கவனித்த டிரைவர் உடனடியாக காரை நிறுத்தினார். சிறிது நேரத்திலேயே காரில் தீ பிடிக்கத் தொடங்கியது. அப்போது தூங்கிக் கொண்டு இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து காரில் இருந்து இறங்கி ஓடினர். இதுகுறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின் அந்த பக்தர்கள் வேறு ஒரு வாகனத்தில் பம்பைக்கு புறப்பட்டு சென்றனர்.

