Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து 13 பேர் பலி: பல வாகனங்கள் தீக்கிரை; தீவிரவாதிகள் சதிச்செயல்; நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து 13 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர். கார் வெடித்ததை தொடர்ந்து அருகிலிருந்த பல வாகனங்கள் தீக்கிரையாகின. இது தீவிரவாத செயலா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் என்ஐஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. டெல்லி கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லியின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று செங்கோட்டை.

செங்கோட்டையை சுற்றிப் பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இப்பகுதியில் டெல்லி பழைய மார்க்கெட் அமைந்துள்ளது. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் இருந்து தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். எனவே செங்கோட்டை பகுதியில் எப்போதுமே உயர் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட சூழலில், நேற்று மாலை 6.55 மணி அளவில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் நுழைவாயில் அருகே கார் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

அதைத் தொடர்ந்து அருகில் நிறுத்தப்பட்ட பல கார்கள், இருசக்கர வாகனங்கள், இரிக் ஷாக்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. பீதி அடைந்த மக்கள் உயிர் தப்பிக்க அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். இந்த வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் பல மீட்டர் தொலைவில் இருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. அருகில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெல்லி வருமான வரி அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலும் கூட குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கார் வெடித்த சமயத்தில் அப்பகுதியில் மக்கள் பலர் கூடியிருந்த நிலையில், 11 பேர் உடல் சிதறி பலியாகினர். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் எடுத்த வீடியோக்களில், ஒரு வாகனத்தின் மீது ஒரு உடல் கிடப்பதும், சாலையில் ஒரு உடல் சிதறிக் கிடப்பதும் காட்டப்பட்டுள்ளது. கை, கால்கள் என ஆங்காங்கே உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன. அங்கு படுகாயமடைந்து கிடந்த 22 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13 ஆனது. மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உடனடியாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து 7.30 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 6 கார்கள், 2 இ ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோ ஆகியவை எரிந்ததாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், காரில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட மத்திய புலனாய்வு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பீகாரில் தேர்தல் நடக்கும் சமயத்தில் தலைநகர் டெல்லியில் கார் வெடிகுண்டு வெடித்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பாக மத்திய புலனாய்வு குழுக்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. டெல்லி போலீசார் சந்தேகிக்கப்படும் சில நபர்களை பிடித்து ரகசிய இடங்களில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

* குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி?

குண்டுவெடிப்பு நிகழ்ந்தது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த டெல்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா, ‘‘செங்கோட்டை போக்குவரத்து சிக்னல் அருகே மெதுவாகச் சென்ற காரில் மாலை 6.52 மணி அளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அந்த காரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கார் வெடித்ததில் அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்தன. பல இறப்புகள், காயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார். முதற்கட்ட தகவலில், மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்ததாக கூறப்பட்ட நிலையில், சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த கார் வெடித்ததாக போலீஸ் கமிஷனர் உறுதிபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

* வெடித்தது ஐ20 கார்

குண்டுவெடிப்பு குறித்து விளக்கம் அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெடித்தது ஐ20 ரக கார் என கூறி உள்ளார். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு நேற்றிரவு அமித்ஷா சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

* கூர்மையான பொருட்கள் எதுவுமில்லை

காரின் முன்பக்க பகுதியில் இருந்து இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக வெடிகுண்டுகள் தயாரிக்க ஆணி, பால்ரஸ் போன்ற கூர்மையான பொருட்கள் பயன்படுத்தப்படும். அவை வெடிக்கும் போது கூர்மையான பொருட்கள் காயங்கள் ஏற்படும். ஆனால் இந்த சம்பவத்தில் கூர்மையான பொருட்கள் குத்திய யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே போல் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பள்ளம் எதுவும் ஏற்பவில்லை. எனவே காரில் வெடித்தது வெடிகுண்டா அல்லது வெடிமருந்துகள் கொண்டு செல்லப்பட்ட போது கார் வெடித்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

* அமித்ஷா ஆய்வு

செங்கோட்டை குண்டுவெடிப்பை தொடர்ந்து உடனடியாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்தார். மேலும், குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர், உளவுத்துறை இயக்குநர், ஒன்றிய உள்துறை செயலாளர் ஆகியோர் அமித்ஷாவுக்கு விளக்கம் அளித்தனர். தகவல்களை கேட்டறிந்த அமித்ஷா, தேசிய பாதுகாப்பு படை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் தடய அறிவியல் துறைகளின் தலைவர்கள் விசாரணைக்கு உதவவும், ஆதாரங்களை சேகரிக்கவும், நிபுணர் குழுக்களை குண்டுவெடிப்பு இடத்திற்கு அனுப்புமாறும் அமித்ஷா உத்தரவிட்டார்.

* டெல்லியில் கடைசியாக 2011ல்…

கடந்த 1997க்குப் பிறகு டெல்லி செங்கோட்டையில் நடந்த 3வது குண்டுவெடிப்பு இது.

நவம்பர் 30, 1997: செங்கோட்டை பகுதியில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.

ஜூன் 18, 2000: டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகளில் எட்டு வயது சிறுமி உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

கடைசியாக டெல்லியில் கடந்த 2011 மே 25ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள கார் நிறுத்துமிடத்தில் சிறிய குண்டுவெடிப்பு நடந்தது. அதில் உயிரிழப்பு எதுவும் நடக்கவில்லை.

* ராகுல், பிரியங்கா இரங்கல்

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘‘இந்த துயர சம்பவத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரமடைந்த குடும்பங்களுடன் நான் நிற்கிறேன். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறேன்’’ என கூறி உள்ளார். இதே போல, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

* சிதறி கிடந்த உடல் பாகங்கள் நேரில் பார்த்தவர்கள் தகவல்

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பை நேரில் பார்த்தவர்கள், குண்டுவெடிப்பின் கோர காட்சிகளை விவரித்துள்ளனர். அமித் முட்கல் (36) என்பவர் கூறுகையில், ‘‘குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் நான் ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவரின் துண்டான கை, என் பின்னால் வந்து விழுந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து வானம் சிவப்பு புகையால் மூடப்பட்டது. எல்லோரும் அலறிக் கொண்டு ஓடினர். தெரு முழுவதும் மனித உடல் பாகங்கள் துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன’’ என்றார். ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறுகையில், ‘‘எனக்கு முன்னால் தான் அந்த கார் சென்று கொண்டிருந்தது. அதில் என்ன இருந்தது என தெரிவில்லை. ஆனால் திடீரென பயங்கர சத்தத்துடன் கார் வெடித்துச் சிதறியது’’ என்றார். சரக்கு வாகன ஓட்டுவநர் பூபிந்தர் சிங் கூறுகையில், ‘‘போக்குவரத்து சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறியதும் அனைத்து வாகனங்களும் சிக்னலில் நகரத் தொடங்கின. அப்போது அந்த கார் வெடித்தது. 2 அல்லது 3 பேரின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக சிதறியதை நாங்கள் பார்த்தோம்’’ என்றார்.

* சாந்தினி சவுக் மார்க்கெட் மூடல்

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பை தொடர்ந்து, அதன் அருகாமையில் உள்ள சாந்தினி சவுக் மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் சாந்தினி சவுக்கில் கடை வைத்திருக்கும் வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘குண்டுவெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. இங்குள்ள கட்டிடங்கள் முழுவதும் அதிர்ந்தன. மக்கள் பயந்து ஓடத் தொடங்கியதால் மார்க்கெட்டில் பெரும் குழப்பம் நிலவியது’’ என்றார். குண்டுவெடிப்புக்கு பிறகு வணிகர்கள் இடையே அச்சம் நிலவுவதால் இன்று கடைகள் மூடப்படுவதாக சாந்தினி சவுக் வர்த்தகர்கள் சங்க தலைவர் பார்கவ் கூறி உள்ளார்.

* பிரதமர் மோடி ஆலோசனை

செங்கோட்டை குண்டுவெடிப்பை தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி நிலைமையை கேட்டறிந்தார். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷாஷடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

* அதிர்ச்சி அளிக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவத்தில் அப்பாவி உயிர்கள் பல பலியாகியுள்ளது அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. சம்பவ இடத்தில் இருந்து வரும் காட்சிகளைக் கண்டு மனமுடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் மனவுறுதியோடு விரைந்து நலம் பெற விழைகிறேன்.