திருமலை: எம்எல்ஏ வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது லாரி மீது கார் மோதியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் கார்லபாலத்தை சேர்ந்தவர்கள் பலராமராஜு(65), லட்சுமி(60), காதிராஜுபுஷ்பவதி (60), ஸ்ரீனிவாசராஜு(54). அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களது உறவினரும், பாபட்லா எம்எல்ஏவுமான நரேந்திரவர்மாவின் மகன் திருமணத்தையொட்டி வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக பலராமராஜு உள்பட 4பேரும் காரில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் 4பேரும் மீண்டும் காரில் தங்களது ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை கார்லபாலம் மண்டலத்தில் உள்ள சத்யவதிபேட்டா அருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்த பலராமராஜு, லட்சுமி, காதிராஜு புஷ்பவதி, னிவாசராஜு ஆகிய 4பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபட்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
