மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா நேற்று அளித்த பேட்டி: விஜய் பேச்சு அரசியல் நாகரிகமா என விமர்சனம் எழுந்துள்ளது. அவரவர் பேசுவது அவரவர் ஸ்டைல். விஜய் பேசுவது அவரது ஸ்டைல். இதில் கருத்து சொல்ல முடியாது. மற்றவர் கருத்தை யாரும் கேட்பதில்லை. கருத்து சொல்லும் இடத்தில் நாங்களும் இல்லை. கட்சி தொடங்கியவர்களுக்கு தெரியும். அவர்கள் ஒரு கணிப்பில் வருகிறார்கள். இதில் கருத்து சொல்லவோ, அறிவுரை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ நாங்கள் விரும்பவில்லை. விஜய் 2 மாநாட்டை முடித்துள்ளார். தற்போது மக்கள் சந்திப்பை தொடங்கியுள்ளார், வரட்டும் பார்ப்போம்.
சினிமா துறையாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் சவால்களை முறியடித்து வெற்றி பெறும்போது தான் மக்களால் அங்கீகரிக்கப்படுவர். அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பரோ கிடையாது. நாங்கள் வெறும் ராஜ்யசபாவை (எம்பி பதவி) மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் கிடையாது. உரிய நேரம் வரும்போது கூட்டணியை அறிவிப்போம். சினிமாவிலேயே எல்லாரும் கேப்டன் படத்தை பயன்படுத்துகின்றனர். கேப்டன் எங்கள் குடும்ப சொத்து, கட்சி சொத்து இல்லை. அவர் தமிழக மக்களின் சொத்து. உரிமையுடன் கேப்டன் படத்தை பயன்படுத்துகின்றனர். நாங்கள் நிச்சயம் தடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.