Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தன்னை முதல்வராக்கியவரையே யார் என்று கேட்டவர் துரோகத்தை பற்றி எடப்பாடி பேசலாமா?: அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருடம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை புளியந்தோப்பு மற்றும் சூளையில் நடந்த அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு, ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சியினர் முதல்வரை சந்திப்பது துரோகத்தின் வெளிப்பாடு என்று தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி அமித்ஷாவை சந்தித்ததை எப்படி எடுத்துக் கொள்ளலாம்.

மோடியை 4 கார்களில் மாறி மாறி சென்று ரகசியமாக சந்திப்பதை எப்படி எடுத்துக் கொள்ளலாம். முதல்வரின் உடல்நல பாதிப்பு குறித்து நலம் விசாரிக்க, அவரது இல்லத்தில் வந்து ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததை எப்படி துரோகம் என்று சொல்ல முடியும். மனிதநேயம் உள்ள, மனிதாபிமானம் உள்ள யாரும் இதனை துரோகம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தன்னை முதல்வராக்கி அழகுபார்த்த சசிகலாவையே யார் என்று கேட்ட எடப்பாடி பழனிசாமி துரோகத்தை பற்றி பேசலாமா? இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, பகுதி செயலாளர் சோ.வேலு, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.