70 ரசாயனங்கள் உடலில் கலக்க வழி வகுக்கிறது: புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகள்: இளைஞர்களிடம் அதிகளவு நாட்டம்: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தனது அரிய கண்டுபிடிப்புகளால் பெரும்பங்காற்றியவர் மேடம்கியூரி. நோபல் பரிசு பெற்ற அவரது நினைவை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 7ம் தேதி (இன்று) தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப் படுகிறது. புற்றுநோய்க்கு மருந்துகள் கண்டுபிடித்து வரும் நிலையிலும் அதனால் தொடரும் இறப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது உலகளவில் ஆண்டுதோறும் 10 லட்சம் இறப்புகள் புற்றுநோயால் நிகழ்கிறது.
உலகளவில் ஆறுபேரில் ஒருவரது மரணத்திற்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், புரோட்டஸ்ட் புற்றுநோய் என்று பல்வேறு வகைகளில் புற்றுநோயின் தாக்கம் உள்ளது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக புகையிலை பயன்பாடு, போதை வஸ்துகள் போன்றவற்றால் புற்றுநோய் பாதித்து இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
சிகரெட், சுருட்டு மற்றும் குழாய்கள் போன்ற புகையிலை பொருட்களில் குறைந்தபட்சம் 70 ரசாயனங்கள் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவற்றை நாம் உபயோகிக்கும் போது, ரசாயனங்கள் ரத்தஓட்டத்தில் நுழைகிறது. இது மனித உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரசாயனங்களை கொண்டு செல்கிறது. இந்த ரசாயனங்கள் ஒரு கட்டத்தில் மனிதர்களின் டிஎன்ஏவை சேதப்படுத்துகிறது. புதிய செல்களை உடலில் உருவாக்குகிறது.
இப்படி அபரிதமாக வளரும் செல்களே புற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களை பயன்படுத்துவோர் இயற்கையாகவே அதில் காணப்படும் நிகோடின் என்ற போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர். இதனால் புகையிலை உபயோகத்தை கைவிடுவது கடினமாகிறது. இதன் காரணமாகவே புகையிலை பொருட்களால் ஏற்படும் புற்றுநோய் இறப்புகள் அதிகரித்து வருகிறது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து புற்றுநோய் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: புற்றுநோயால் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு இறப்புகளுக்கு புகையிலை பொருட்கள் காரணமாகிறது. புகையிலை பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இது நுரையீரல், இதயம், ரத்தநாளங்கள், இனப்பெருக்க உறுப்புகள், தோல், வாய், கண்கள், எலும்புகள் என்று உடலின் பெரும்பாலான உறுப்புகளையும் சேதப்படுத்தும். ஒருவர் புகை பிடிக்க ஆரம்பித்த உடனேயே நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகள், காற்றுப்பைகள் சேதமடைகிறது.
தொடர்ந்து புகை பிடிக்கும் போது, நுரையீரல் செயல்பாடு மோசமாகிறது. ஆனால் சில ஆண்டுகள் கழித்தே இந்த பாதிப்புகளை நாம் கண்டறிய முடியும். புகையிலை பொருட்கள் என்பது புற்றுநோய் பாதிப்பை ஒரு கட்டத்திற்கு மேல்காட்டினாலும் ஈறுநோய், பல்இழப்பு அதிகரிப்பு, வாசனை உணராமை, சுவை குறைவு, வாய்துர்நாற்றம், கறைபடிந்த பற்கள் போன்ற அறிகுறிகளை ஆரம்ப மாதங்களிலேயே உணர்த்த ஆரம்பித்து விடும்.
புகையிலை பொருட்களில் உள்ள நிகோடின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது. இது ஒரு புறமிருக்க சமீபகாலமாக இளம்வயதினரிடம் புகையிலை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் சொல்கிறது. தினமும் சிகரெட் பிடிக்கும் 10 பேரில் 9 பேர், 19 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நூறுபேரில் 5 மாணவர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
புற்றுநோய் அபாயங்கள் குறித்து அனைவரும் அறிந்துள்ள நிலையில், இளைஞர்களும், மாணவர்களும் புகையிலை பொருட்களுக்கு அதிகளவில் அடிமையாவது வேதனைக்குரியது. இது நோயின் வீரியத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மை. இது ஒருபுறம் இருந்தாலும் நாளைய சமுதாயத்தை வழிநடத்தும் இளைய தலைமுறையினர், அதற்கு அடிமையாகி வருவது உண்மையில் வேதனைக்குரியது. எனவே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியம். அதே நேரத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு உறுதியேற்பதும் அதைவிட முக்கியம். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
* 18 வயதிற்கு முன்பே தொடங்குகின்றனர்
புகை பிடிக்கும் பழக்கத்தை எல்லா மக்களும் 18 வயதிற்கு முன்பே தொடங்குகின்றனர். இதனால் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை ஒரு குழந்தை கோளாறு என்றே கூறலாம். தினமும் 18 வயதுக்கு உட்பட்ட 2300 பேர், தனது முதல் சிகரெட்டை புகைக்க தொடங்குகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகாக்களிடம் காணப்படும் புகைப்பழக்கமே, மாணவர்களின் ஆர்வத்திற்கு அடித்தளம் அமைக்கிறது. திரைப்படங்கள், வீடியோ கேம்கள், ஆன்லைன் விளம்பரங்களும் புகை பிடிக்கும் ஆசையை தூண்டுகின்றன. ஆண்கள், இளைஞர்கள், குறைபாடு உள்ளவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள், ஆல்கஹாலுக்கு அடிமையானவர்கள் அதிகளவில் புகையிலை பொருட்களை நாடுகின்றனர் என்பதும் ஆய்வுகள் தெரிவித்துள்ள அதிர்ச்சி தகவல்.


