புற்றுநோய் தடுப்பு, பராமரிப்பு திட்டத்தில் மகளிர்களின் நல்வாழ்விற்காக நடமாடும் மருத்துவ ஊர்திகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக ரூ.40 கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக 196 உதவியாளர்கள் பணியிடத்திற்கும், குடும்ப நல இயக்ககத்தின் கீழ் 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தமிழ்நாடு மாநில போக்குவரத்து இயக்ககத்தின் கீழ் 19 திறன்மிகு உதவியாளர்-II (பொருத்துநர்- II) பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் என மொத்தம் 233 பேருக்கு முதல்வர் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு ஏற்படும் மூன்று முக்கிய புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை முதல்வர் பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் கீழ், நடமாடும் மருத்துவ ஊர்தியின் மூலம், பெண்கள் வசிக்கும் வசிப்பிடத்திற்கு அருகிலேயே 3 முக்கிய புற்றுநோய்களான கருப்பைவாய், மார்பக, வாய் புற்றுநோய்களுக்கான பரிசோதனை மற்றும் பிற முக்கிய நோய்களான நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய நோய்கள் போன்றவற்றிற்கான பரிசோதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் டிஜிட்டல் மேம்மோகிராபி, இசிஜி கருவி, செமி-ஆட்டோஅனலைசேர் உள்பட பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த மாதிரி வாகனமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதை தொடர்ந்து, மேலும் 37 வாகனங்கள் ரூ.40 கோடி செலவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் விஜயலட்சுமி, மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் உமா மகேஸ்வரி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
