Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாய்க்கால் பாலம் இடிப்பு விவகாரம்: இரவு நேரத்தில் பொதுமக்கள் போராட்டம்

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஆஞ்சநேயா நகர் குடியிருப்புக்கு செல்லும் பாதையில் இருந்த பாலம் இடிக்கப்பட்டதை கண்டித்து 300க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். தேனி அருகே பழனி செட்டிபட்டியில் ஆஞ்சநேயா நகர் விரிவாக்க குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. தேனி கம்பம் நெடுஞ்சாலையில் இருந்து லட்சுமி நகர் வழியாகவும், வாசுகி காலனி வழியாகவும் ஆஞ்சநேயா நகருக்கு செல்லலாம்.

இதில் வாசுகி காலனி வழியை 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆஞ்சநேயா நகர் குடியிருப்பாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இதில் ஆஞ்சநேயா நகர் மற்றும் வாசுகி காலனியை இணைக்கும் வகையில் அங்குள்ள வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலத்தை ஒட்டிய பகுதி தங்களுக்கு சொந்தமானது இதில் யாரும் நடமாட கூடாது என தனி நபர் ஒருவர் உரிமை கோரினார். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினையும் அழைத்து சமரச பேச்சு நடத்தி இருந்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சம்பத்தப்பட்ட பாலத்தை அந்த தனி நபர் இடித்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆஞ்சநேயா நகர் குடியிருப்பாளர்கள் நேற்று முன்தினம் இரவு பாலம் அருகே திரண்டு வந்து உடனடியாக பாலத்தை கட்டி தர வேண்டும் என்றும், பாலத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தேனி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து வருவாய்த்துறை கோட்டாட்சியர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.