புதுடெல்லி:கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவர் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கனடா அமைச்சர் அனிதா ஆனந்தின் சுற்றுபயணத்தால் இந்தியா- கனடா இடையேயான இரு தரப்பு ஒத்துழைப்பு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் மக்களிடையேயான உறவுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது அவசியம் என்று அவரிடம் பிரதமர் கூறினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கனடா அமைச்சர் அனிதா நாளை வரை இந்தியாவில் சுற்றுபயணம் செய்கிறார். கடந்த 2023ம் ஆண்டு கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால் இரு தரப்பு உறவுகள் மோசமடைந்தது. அனிதா ஆனந்தின் சுற்றுபயணம் மூலம் இருதரப்பு உறவுகள் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+
Advertisement