டொரன்டோ: கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, ஸ்பெயின் வீராங்கனை ஜெஸிகா பூஸாஸ் அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கனடாவின் டொரன்டோ நகரில் கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை ஜெஸிகா பூஸாஸ் (22), சீன வீராங்கனை ஸு லின் (31) மோதினர். முதல் செட்டில் இருவரும் சம பலத்துடன் மோதியதால் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் பூஸாஸ் போராடி வசப்படுத்தினார். அடுத்து நடந்த 2வது செட்டை, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் லின் எளிதில் கைப்பற்றினார்.
அதைத் தொடர்ந்து, 3வது செட்டில் சுதாரித்து புயலாய் ஆடிய பூஸாஸ் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அவர், காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா (26), உக்ரைன் வீராங்கனை டயானா யஸ்ட்ரெம்ஸ்கா (25) மோதினர். இருவரும் சம பலத்துடன் மோதியதால் முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக, வசப்படுத்தினர். அடுத்து நடந்த 3வது செட்டை, ரைபாகினா கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார். அதனால், காலிறுதிச் சுற்றுக்கு அவர் முன்னேறினார்.