டொரொன்டோ: கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் அபார வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். கனடாவில் சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றில் களமிறங்கினர்.
மகளிர் பிரிவு ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்கா வீராங்கனைகள் கோகோ காஃப் (21 வயது, 2வது ரேங்க்), டேனியல் காலின்ஸ் (31 வயது, 61வது ரேங்க்) மோதினர். அனல் பறந்த இந்த ஆட்டத்தில் காஃப் 7-5, 4-6, 7-6 (7-5) என்ற செட்களில் கடுமையாக போராடி வெற்றிப் பெற்றார்.
2 மணி, 55 நிமிடங்கள் நீண்ட இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் காஃப் 3வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா (26), அமெரிக்க வீராங்கனை ஹேலி பாப்டிஸ்டே (23) மோதினர். இப்போட்டியில் துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய ரைபாகினா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
* ஆடவர் ஒற்றையரில் ஸ்வரெவ் அபாரம்
ஆடவர் பிரிவில் நடந்த ஒற்றையர் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (28 வயது, 3வது ரேங்க்), அமெரிக்காவின் ஆடம் வால்டன் (26 வயது, 88வது ரேங்க்) களம் கண்டனர். அதில் ஸ்வரெவ் ஒரு மணி 42 நிமிடங்கள் போராடி 7-6 (8-6), 6-4 என நேர் செட்களில் வெற்றிப் பெற்றார். அதன் மூலம் 3வது சுற்றுக்குள் விளையாட ஸ்வரெவ் தகுதிப் பெற்றார்.