கனடா ஓபன் டென்னிஸ்; டாசனிடம் வெற்றி சாவியை பறிகொடுத்த மேடிசன் கீஸ்: மற்றொரு போட்டியில் நவோமி அபாரம்
மான்ட்ரீல்: கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸை, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் அபாரமாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். கனடா ஓபன் டென்னிஸ் போட்டி மான்ட்ரீல், டொரோன்டோ நகரங்களில் நடக்கின்றன. மான்ட்ரீல் நகரில் நேற்று பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை (30 வயது, 13வது ரேங்க்), 6-2, 6-2 என நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (27 வயது, 49வது ரேங்க்) வீழ்த்தினார். ஒரு மணி 8 நிமிடங்களில் முடிந்த ஆட்டத்தின் மூலம் ஒசாகா அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். கடைசி காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (30 வயது, 8வது ரேங்க்), டென்மார்க்கின் கிளாரா டாசன் (22 வயது, 19வது ரேங்க்) மோதினர். ஒரு மணி 10 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் 6-1, 6-4 என நேர் செட்களில் வென்ற டாசன் அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டங்களில் நேர் செட்களில் வென்ற ஒசாகா - டாசன் இன்று நடைபெறும் அரையிறுதியில் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
* ஆடவர் பிரிவில் ஷெல்டன், டெய்லர் அரையிறுதிக்கு தகுதி
கனடா ஓபன் ஆடவர் பிரிவில் நடந்த 3வது காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் (26 வயது, 8வது ரேங்க்), அமெரிக்காவின் பென் ஷெல்டன் (22 வயது, 7வது ரேங்க்) மோதினர். அதில் ஷெல்டன் 6-3, 6-4 என நேர் செட்களில் மினாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசி காலிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ரூபலெவ் (27 வயது, 5வது ரேங்க்), அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் (27 வயது, 11வது ரேங்க்) களம் கண்டனர்.
முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றிய டெய்லர் 2வது செட்டை வசப்படுத்த கடுமையாக போராடினார். டை பிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் தனதாக்கினார். அதனால், போட்டியில் வென்ற டெய்லர் 2வது அமெரிக்கராக அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் ஷெல்டன்-டெய்லர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.