மான்ட்ரீல்: கனடாவில் பெண்களுக்கான டபிள்யூடிஏ மான்ட்ரீல் ஓபன் டென்னிஸ் போட்டியும், ஆண்களுக்கான ஏடிபி டொரொன்டோ ஓபன் டென்னிஸ் போட்டியும் நடந்து வருகிறது. இதில் 2வது சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. மான்ட்ரீல் ஓபன் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, லிடிமிலா சாம்சோனோவா ஆகியோர் மோதினர். இதில் ஒசாகா 4-6, 7-6(8-6), 6-3 என்ற செட்களில் வென்று 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் போலாந்தின் இகா ஸ்வியாடெக், சீனாவின் ஹன்யுகு ஓ ஆகியோர் மோதினர். இரண்டாவது சுற்றில் நேரடியாக களம் கண்ட ஸ்வியாடெக் ஒரு மணி 12 நிமிடங்களில் 6-3, 6-1 என நேர் செட்களில் ஹன்யுகுவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்வியாடெக் போல் நேரடியாக 2வது சுற்றில் வி ளையாடிய ஜெசிகா பெகுலா, மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), யெலனா ஆஸ்டபென்கோ (லாத்வியா), எலனா ஸ்விடோலினா(உக்ரைன்) ஆகியோரும் வெற்றிப் பெற்று 3வது சுற்றில் விளையாட உள்ளனர். ஏடிபி டொரொன்டோ ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நேற்று பென் ஷெல்டன், டெய்லர் ஃபிரிட்ஸ், ஃபிரான்சஸ் டியா ஃபோ(அமெரிக்கா), அலெக்ஸ் டி மினார்(ஆஸ்திரேலியா) வெற்றிப் பெற்று 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றனர்.