டொரன்டோ: கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் கனடாவின் டொரன்டோ நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தானுக்காக ஆடி வரும் எலெனா ரைபாகினா (26), ரோமானிய வீராங்கனை ஜாக்குலின் கிறிஸ்டியன் (27) மோதினர்.
முதல் செட்டில் அற்புதமாக ஆடிய ரைபாகினா, ஒரு புள்ளி கூட விட்டுத் தராமல் 6-0 என்ற கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். 2வது செட் கடுமையாக இருந்தபோதும், அதையும் 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் டைபிரேக்கரில் கைப்பற்றினார். அதனால் நேர் செட்களில் வென்ற ரைபாகினா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா (25), அமெரிக்க வீராங்கனை எம்மா நவரோவை (24), 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அதிர்ச்சி அளித்தார். இன்னொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் (21), 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில், ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதர்மெடோவாவை (28) 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
* ஆடவர் ஒற்றையர் பிரிவு ஸ்வெரெவ் அபாரம்
கனடா ஓபன் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (28), இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டி (24) மோதினர். முதல் செட்டை 6-3 (5-7) என்ற புள்ளிக் கணக்கில் ஸ்வெரெவ் போராடி இழந்தார். இருப்பினும், பின்னர் சுதாரித்து ஆடிய அவர், அடுத்த இரு செட்களையும், 6-3, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார்.