மான்ட்ரீல்: கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் சாம்பியன் இகா ஸ்வியடெக்கை, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் அபாரமாக வென்று அதிர்ச்சி அளித்தார். கனடா ஓபன் டென்னிஸ் போட்டி மான்ட்ரீல், டொரோன்டோ நகரங்களில் நடக்கின்றன. அதில் மான்ட்ரீல் நகரில் நடைபெறும் பெண்களுக்கான போட்டியில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், சில நாட்களுக்கு முன்பு விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான போலந்தின் இகா ஸ்வியாடெக் (24 வயது, 3வது ரேங்க்) களமிறங்கினார்.
அவரை எதிர்த்து டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் (22 வயது, 19வது ரேங்க்) விளையாடினார். டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை டாசன் 7-6 (7-1) என்ற கணக்கில் போராடி வசப்படுத்தினார். தொடர்ந்து 2வது செட்டை 6-3 என்ற கணக்கிலும் கைப்பற்றினார். எனவே ஒரு மணி 53 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை டாசன் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்தார். ஸ்வியடெக்கை முதல் முறையாக வென்றதன் மூலம் டாசன் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (27வயது, 49வது ரேங்க்), லாத்வியா வீராங்கனை அனஸ்டசியா சேவஸ்டோவா (35 வயது, 386வது ரேங்க்) களம் கண்டனர். அதில் ஒசாகா 49 நிமிடங்களிலேயே 6-1, 6-0 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். விம்பிள்டனில் 2வது இடம் பிடித்த அமெரிக்காவின் அமண்டா அனிஸிமோவா (23 வயது, 7வது ரேங்க்) 4-6, 1-6 என நேர் செட்களில் உக்ரைன் வீராங்கனை எலெனா ஸ்விடோலினாவிடம் (30 வயது, 13வது ரேங்க்) வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (30 வயது, 8வது ரேங்க்), செக் குடியரசின் கரோலினா முகோவாவை (28வயது, 14வது ரேங்க்) 4-6, 6-3, 7-5 என்ற செட்களில் வெற்றி கண்டார்.