ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளி சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அபோட்ஸ்ஃபோர்ட் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி (68), திங்களன்று அவரது வீட்டின் வெளியே மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவின் லூதியானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், ‘கேனம் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் ஜவுளி மறுசுழற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். சம்பவத்தன்று காலை, தர்ஷன் சிங் தனது காரில் ஏறி அமர்ந்ததும் கொலையாளி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்த போலீசார் ஆபத்தான நிலையில் குண்டு காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவமாகும். இந்த சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
