"பாலஸ்தீனம் என்பது தனிநாடுதான்": பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து பிரான்சும் அங்கீகரித்தது!!
வாஷிங்டன் : பாலஸ்தீனம் என்பது தனிநாடுதான் என்று பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரண்டு பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசை முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனம் தனிபிரதேசமாக இருந்தாலும், உலக நாடுகள் அதனை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்த சூழலில், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து பிரான்சும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. ஐநா கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது ஹமாஸ் இயக்கத்துக்கு கிடைத்த பெரும் தோல்வி என்று கூறியுள்ளார். இதே போல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அனைத்து பனைய கைதிகளையும் விடுவிக்கும் பட்சத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க தயார் என பெல்ஜியம் நிபந்தனை விதித்துள்ளது. ஐநா பொது சபையில் மொத்தம் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் 151 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்துள்ளன.