பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கான இறுதிகட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதில், வரலாற்று சிறப்புமிக்க வகையில் 65.08% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 11ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைவதால், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆகிய இரு கூட்டணிகளின் தலைவர்களும், இந்த இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் 20 மாவட்டங்களில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி, இந்தியா கூட்டணியின் பீகார் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வியாதவ் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 122 தொகுதிகளில் மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பெண்கள், இளைஞர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் வாக்கு இந்த தேர்தலில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த பிறகு 11ஆம் தேதி ஓட்டுப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 14ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
* பஞ்சாப் இடைத்தேர்தல் எஸ்பி சஸ்பெண்ட்
பஞ்சாப் மாநிலம் டர்ன்தரன் இடைத்தேர்தல் நவ.11ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஷிரோண்மணி அகாலிதளம் கட்சி பிரசாரம் செய்வதை டர்ன் தரன் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் ரவ்ஜோத் கவுர் கிரேவால் தடுப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்பியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர், உடனடியாக டர்ன் தரன் எஸ்பியாக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* முதல் கட்டத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குப்பதிவு
பீகார் சட்டப்பேரவைக்கு நடந்த முதல் கட்டத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு 65.08 சதவீதம் என்றும் இது பீகார் வரலாற்றில் மிக அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2020ல் நடைபெற்ற சட்டப்பேரவை வாக்குப்பதிவு சதவீதத்தை விட இது 7.79 சதவீதம் அதிகம். அப்போது 57.29 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். முசாபர்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 71.81 சதவீதம், சமஸ்திபூரில் 71.74 சதவீதம் பதிவாகி உள்ளது. அதே போல் மாதேபுரா (69.59), சஹர்சா (69.38), வைஷாலி (68.50) மற்றும் ககாரியா (67.90) மாவட்டங்களிலும் அதிக வாக்கு பதிவாகி இருந்தது.
பாட்னா மாவட்டத்தில் 59.02 சதவீத வாக்குகளும், லக்கிசராய் 64.98 சதவீத வாக்குகளும், முங்கர் 62.74 மற்றும் சிவான் 60.61 சதவீத வாக்குகளும் பதிவாகின என்று தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்து உள்ளது. இதற்கிடையே பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக 4 வாக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோபால்கஞ்சில் 2 பேர் மீதும், ஆரா மற்றும் சரண் ஆகிய இடங்களில் தலா ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
* சாலையோரத்தில் தூக்கி எறியப்பட்ட விவிபேட் சீட்டுகள்: தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்
பீகாரில் முதற்கட்ட தேர்தல் நடந்த சமஸ்திபூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் ஏராளமான விவிபேட் ஒப்புகை சீட்டுகள் தூக்கி வீசப்பட்டு இருந்தன. முதற்கட்ட தேர்தல் நடந்த சரைரஞ்சன் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஒரு கல்லூரி அருகே இந்த சீட்கள் கிடந்தன. இது வாக்களிக்கும் போது அவர்கள் பதிவு செய்த வாக்கு எந்த சின்னத்திற்கு விழுந்தது என்பதை உறுதி செய்யும். தேர்தல் முறைகேடு சந்தேகம் வந்தால் மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்கும், விவிபேட்டில் பதிவான வாக்கும் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப்பார்க்கப்படும். அப்படி முக்கியமான விவிபேட் ஒப்புகை சீட்டுகள் சாலையோரத்தில் வீசப்பட்டு இருந்தன.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து சமஸ்திபூர் மாவட்ட உதவி தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. மேலும் பீகார் தலைமை தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு இது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவை ஒரு போலி விவிபேட் சீட்டுகள் ஆகும். எனவே பீகார் தேர்தல் வாக்குப்பதிவு செயல்முறையின் நேர்மை சமரசம் செய்யப்படவில்லை. போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது’ என்றார்.
* மோடியின் சாம்ராஜ்யத்தை எதிர்த்து காங். போராடுகிறது: பிரியங்கா காந்தி பேச்சு
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பீகாரில் கதிஹார், பாகல்பூர் மாவட்டங்களில் பேசும் போது,’ மகாத்மா காந்தி ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராகப் போராடினார். அதே போல் மோடி சாம்ராஜ்யத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. பிரதமர் மோடி நாட்டு துப்பாக்கி என்கிறார். அவர் தனது பதவியின் கண்ணியத்தை காப்பாற்றவில்லை. ஒருபுறம், பிரதமர் அகிம்சைக்காக நிற்கும் ‘வந்தே மாதரம்’ பாடலைப் புகழ்ந்து பேசுகிறார். மறுபுறம், அவர் நாட்டு துப்பாக்கி போன்ற வார்த்தைகளை பேசுகிறார். ஒரு புறம் வந்தேமாதரம் 150வது ஆண்டு விழாவில் பேசுகிறார். மறுபுறம் பாஜவும் ஆர்எஸ்எஸ்ஸும் வந்தே மாதரத்தைப் பாடத் தயங்கின. இவ்வாறு அவர் பேசினார்.
* என்னை சமாளிக்க 30 ஹெலிகாப்டர்கள்
என்னை எதிர்கொள்ள 30 ஹெலிகாப்டர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். ஒரே நாளில் 18 தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ‘என்னை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு பீகாரி அனைவரையும் விட வலிமையானவன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறான். 37 வயது இளைஞனான என்னைக் கண்டு பாஜ பயந்துபோய் உள்ளது. என்னை எதிர்கொள்வதற்காக மட்டும் 30 ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.
* அதிக வாக்குப்பதிவு ‘65 வோல்ட்’ அதிர்ச்சி: பிரதமர் மோடி உற்சாகம்
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மற்றும் பெட்டியா பகுதியில் நேற்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பீகாரில் முதல் கட்டத் தேர்தலில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு 65 வோல்ட் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதனால் இப்போது அவர்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கிறார்கள். நவம்பர் 11 அன்று நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலிலும் முதல் கட்டத்தின் சாதனையை முறியடிக்க வேண்டும் இவ்வாறு பேசினார்.
* பீகாரில் ராகுல் கடை இனி மூடப்படும்: அமித்ஷா பேச்சு
பீகாரில் பூர்னியா பகுதியில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,’ பீகார் சட்டப்பேரவை தேர்தலுடன் இந்தியா கூட்டணி அழிக்கப்படும். இங்கு 160 க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அமையும் என்பதால் பீகாரில் ராகுல்காந்தியின் கடை இனிமேல் மூடப்படும். ஒவ்வொரு சட்டவிரோத குடியேறியையும் நாங்கள் கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, அவர்களின் நாட்டிற்கு நாடு கடத்துவோம்’ என்றார்.
* வாக்கு திருட்டு ஆதாரம் இருந்தால் ராகுல் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும்: ராஜ்நாத்சிங்
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: பீகாரில் வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி நினைத்தால், அவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லை; அவர் ஒரு அரசியலமைப்பு அமைப்பின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அவர் வெறுமனே பொய் சொல்கிறார். இவ்வாறு பேசினார்.
* புலம்பெயர் தொழிலாளர்கள், இளைஞர்களே மாற்றத்திற்கான காரணி, பெண்கள் அல்ல: பிரசாந்த் கிஷோர்
பீகார் தேர்தலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இளைஞர்களும்தான் உண்மையான மாற்றத்திற்கான காரணி ஆவார்கள். பெண்கள் அல்ல என்றும் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். அவர் கூறுகையில், இளைஞர்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் மாற்றத்திற்காக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் வாக்களிக்க அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தனர். ஏனெனில் அவர்களுக்கு மாற்று இல்லை. இந்த முறை அவர்கள் எனது கட்சிக்கு வாக்களித்தனர். பிரதமர் மோடி முன்பு லாலுபிரசாத் கட்சியின் காட்டு ராஜ்ஜியம் பற்றி பேசி அச்சத்தைப் பரப்பி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுவாக மக்களின் வாக்குகளைப் பெற்றார். மக்கள் இந்த தேர்தலில் ஜன் சுராஜ் கட்சிக்கு வாக்களித்தனர்’ என்றார்.

