வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களிடத்தில் பிரசாரம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களிடத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது. திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், புதுச்சேரி மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி., டி.எம்.செல்வகணபதி எம்.பி, மாநில துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் இரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், திருமதி பூர்ணசங்கீதா சின்னமுத்து, திருமதி ஜெ.வீரமணி, ஜெ.இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எஸ்ஐஆர் எனும் இந்திய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவின் கயமைத்தனத்துக்கு எதிராகக் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் அனைத்து வகை அறப்போராட்டத்துக்கு மாணவர் அணி சார்பில் வலுச்சேர்க்க வேண்டும். பீகாரில் நடந்த குளறுபடிகளை சரிசெய்யாமல், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு எஸ்ஐஆர் திட்டத்தை செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதாகவும் உள்ளது.
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கொண்டு வருவது வாக்காளர்களை நீக்கும் தந்திரம். பீகாரில் நடந்த இப்பணிக்கு எதிரான வழக்கில் இறுதி உத்தரவு இன்னும் பிறப்பிக்கவில்லை. இச்சூழலில் தமிழகத்தில் இதைச் செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதற்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் தலைவர் மு.க.ஸ்டாலிள். தலைவரின் சட்டப் போராட்டம் வெற்றிபெறும்.
கருத்தியல் ரீதியாக மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் மாணவர் அணி எஸ்ஐஆர்க்கு எதிராகப் பிரசாரத்தை மேற்கொண்டு தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு வலுசேர்க்கும். நவம்பர் 11ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி சார்பில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும். ‘எனது வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி இருநூறு தொகுதிகளில் வெற்றி’ என்ற தலைவர் மு.க.ஸ்டாலினின் முழக்கத்தை நிறைவேற்றுவோம் உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

