Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டிசம்பர் மாத பிரசாரத்தை திடீரென மாற்றியது ஏன்? விஜய்யிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது: செந்தில் பாலாஜி பேட்டி

கோவை: விஜய்யிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது என்று செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.  கோவை வடகோவை பகுதி, திமுக அலுவலகத்தில் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக துரை.செந்தமிழ் செல்வன் நேற்று பொறுப்பேற்றார். முன்னதாக காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், துரை.செந்தமிழ் செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:

கரூர் விவகாரத்தை பொறுத்தவரை நான் ஏற்கனவே விரிவாக பேசிவிட்டேன். பல்வேறு விளக்கங்களை கொடுத்து விட்டேன். தற்போது விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, விசாரணை முடிந்த பிறகு அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்கும். எனவே, அது சம்பந்தமான கேள்விகளை தற்போதைக்கு தவிர்க்கலாம். அந்த விவகாரம் தொடர்பாக வரும் புதிய வீடியோக்கள் அனைத்தும் விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்படும்.

ஏற்கனவே அரசின் சார்பில் முழு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து கரூரில் நான் முழு விளக்கங்களை தெரிவித்துள்ளேன். விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையில் என்ன வருகிறதோ, அதனை பார்த்து அது பற்றி பேசுவோம்.அரசின் மீது கேட்கப்படும் கேள்விகளை இன்னொரு பக்கம் செய்தியாளர்கள் கேட்பதில்லை.

யாரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை யாரிடம் கேட்கிறோம் என்று செய்தியாளர்கள் நீங்களே சுய பரிசோதனை செய்யுங்கள். ஏன் 7 மணி நேரம் தாமதமாக வந்தீர்கள்?. ஏன் 500 மீட்டருக்கு முன்பாகவே வண்டிக்குள் சென்று விட்டீர்கள்? ஏன் 12 மணிக்கு என்று அறிவித்துவிட்டு 7 மணிக்கு வந்தீர்கள்? டிசம்பர் மாதம் திட்டமிட்டு இருந்த பிரசாரம் ஏன் முன்கூட்டியே வந்தது? என்று விஜய்யிடம் நீங்கள் கேட்டிருக்க வேண்டும். இருக்கின்ற சூழலை எடுத்துக் கூறுகின்ற கடமை நமக்கு உள்ளது. அந்த பொறுப்பும் நம்மிடம் உள்ளது. என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் எதிர் புறத்திலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?. இவ்வாறு அவர் கூறினார்.