பிரசார வரவேற்பு பேனரில் எழுத்து பிழை ‘எடப்பாடி பழனிசாமி தோல் பேக்டரியா நடத்துறாரு?’சமூக வலைத்தளங்களில் வைரல்
ஈரோடு: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உபட்ட அவல்பூந்துறையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடியை வரவேற்கும் வகையில் தவெக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில், ‘‘எங்களுடைய கஷ்டமான காலங்களில் எங்களுக்கு தோல் கொடுத்த எடப்பாடியாருக்கு நன்றி. நாங்கள் என்றும் உங்களுக்கு கடமை பட்டுள்ளோம்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த பேனரில் ‘தோள்’ என்பதற்கு பதிலாக, ‘தோல்’ என எழுத்துப்பிழை இருந்தது. இந்த பேனர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பதிலுக்கு கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர். அதாவது, ‘‘எடப்பாடியார் ‘தோல்’ கொடுத்தாராம்... அவரென்ன தோல் பேக்டரியா நடத்துறாரு?’’ என அவர்கள் கேட்டு பதிவிட்டுள்ளனர். மேலும் ‘‘தவெகவினர் முதலில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றும் அவர்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.