கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் முன்னிலையில் கம்போடியா-தாய்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஜூலையில் தாய்லாந்து, கம்போடியா இடையே எல்லை பிரச்னையில் மோதல் ஏற்பட்டது. இதில் 40 பேர் பலியாகினர்.இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து தற்காலிகமாக போரை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பான ஆசியானின் 3 நாள் உச்சி மாநாடு கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் டிரம்ப் கோலாலம்பூர் வந்தார். மாநாட்டில் கலந்து கொண்ட தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல், கம்போடியா பிரதமர் ஹன் மனேத் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி கம்போடிய கைதிகளை தாய்லாந்து விடுவிக்கும், தாய்லாந்து கைதிகளை கம்போடியா விடுவிக்க உள்ளது. இதில்,பேசிய டிரம்ப்,‘‘தாய்லாந்து,கம்போடியா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பெருமை கொள்கிறேன். 8 மாதங்களில் 8 போர்களைத் அமெரிக்கா தடுத்துள்ளது. இதற்கு முன் அதனை போல் எதுவும் நடந்ததில்லை. இனிமேலும் நடக்காது. ஒரு போரையாவாது நிறுத்தியுள்ள அதிபர் உள்ளாரா? அவர்கள் போரைத் தொடங்குவார்கள், நிறுத்துவதில்லை,’’ என்றார்.
